கேரளாவை அடுத்தடுத்து உலுக்கிய இரண்டு சோக சம்பவங்கள்..! மீளாத்துயரில் மக்கள்..!
Kerala landslide and flight crash 2 major incidents in Kerala
கேரளாவில் அடுத்தடுத்து நடந்த இரண்டு மோசமான சம்பவங்கள் இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 80க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில், 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் இடுக்கி, வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு வரும் 11 ஆம் தேதி வரை ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, கேரளாவில் இன்று இரவு (வெள்ளிக்கிழமை) இரவு நடந்த விமான விபத்து மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் ஒடு பாதையிலிருந்து விலகியதால் விபத்துக்குள்ளாகி விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி விமானி உயிரிழந்த நிலையில் துணை விமானி படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் வேகமாக நடந்துவருகிறது. இதுவரை 14 பேர் இந்த விபத்தில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்றுவருகிறது.
இப்படி அடுத்தடுத்து கேரளாவில் நடந்த இரண்டு மோசமான விபத்துக்கள் இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.