கேரளா 2018 பெருவெள்ளத்தில் திறம்பட பணியாற்றிய அதிகாரி பிரதீப்.. குன்னூர் விபத்தில் மரணம்... உருக்கமான தகவல்கள்.!
கேரளா 2018 பெருவெள்ளத்தில் திறம்பட பணியாற்றிய அதிகாரி பிரதீப்.. குன்னூர் விபத்தில் மரணம்... உருக்கமான தகவல்கள்.!
குன்னூர் இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பலியான வீரர்களின் கடந்த கால தீரமிக்க பணிசெயல்கள் தொடர்ந்து அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஜூனியர் வாரண்ட் அதிகாரி ஏ பிரதீப், கடந்த 2018 கேரள பெருவெள்ளத்தில் பணியாற்றிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
கடந்த 2018 ஆம் வருடம் கேரளாவில் மழை, பெருவெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது. அம்மாநிலம் முழுவதும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மீட்பு பணியின் போது, மீட்பு பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் பிரதீப். இவர் கோயம்புத்தூர் சூலூரில் உள்ள விமானப்படைத்தளத்தில் பணியாற்றி வந்தார். பிரதீப்பிற்கு 38 வயதாகும் நிலையில், அவர் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்.
ஜூனியர் வாரண்ட் அதிகாரியாக இருந்த பிரதீப், இந்திய விமானப்படையில் துப்பாக்கி சுடும் வீரராகவும் இருந்துள்ளார். சூலூரில் வைத்து அவர் விமானத்தை இயக்கவும் பயிற்சி பெற்றுள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். பிரதீப்பின் மறைவு தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், கடந்த 2018 ஆம் வருடம் பிரதீப் கேரள பெருவெள்ள சேதத்தில் பணியாற்றியது குறித்து பகிர்ந்துள்ளார்.
மேலும், கேரள வெள்ளத்தின் போது மாநிலத்தை காப்பாற்ற துணிச்சலுடன் பணியாற்றிய இராணுவ வீரர் என்றும், அவரது குடுமத்தினருக்கும், அன்பிற்குரியவர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தனது இரங்கல் குறிப்பில் பகிர்ந்துள்ளார். இவர் இந்திய குடியரசு தலைவரால் பாராட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதியாக விடுமுறை எடுத்து வந்த பிரதீப், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தையுடன் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார். மேலும், 2 வருடத்தில் ஓய்வு பெற்றுவிட்டு, புதிய வீடு கட்டவும் பிரதீப் திட்டமிட்டு இருந்துள்ளார். அவரின் கனவுகள் நனவாகாமல் இன்று மறைந்துவிட்டார் என்றும் கிராமத்தினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.