தர்ணா போராட்டத்தில், ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆண் குழந்தையை பெற்றெடுத்த பெண்.!
தர்ணா போராட்டத்தில், ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆண் குழந்தையை பெற்றெடுத்த பெண்.!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணுக்கு, போராட்டக்களத்திலேயே குழந்தை பிறந்த சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் மாவட்டம், வாசன்வாடி கிராமத்தை சேர்ந்தவர் அப்பாராவ் பவார். இவருக்கு பழங்குடியின மக்கள் நலத்திட்டம் கீழ் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. வீடு ஒதுக்கப்பட்டதற்கான அறிவிப்பு வந்து 2 வருடம் ஆகியும், கிராம பஞ்சாயத்து சார்பில் நிலமும் ஒதுக்கப்படவில்லை, வீடு கட்டுவதற்கு நிதியும் வரவில்லை.
இதனால் அப்பாராவ் பவரின் குடும்பத்தார் கடந்த 3 மாதமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக பீட் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் குடும்ப உறுப்பினரின் ஒருவராக இருக்கும் கர்ப்பிணி பெண் மனிஷா கலோவும் கலந்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அதிகாலையில் பிரசவ வலி ஏற்படவே, அவருக்கு அங்கேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சிவாஜி நகர் காவல் துறையினர், அவசர ஊர்தியுடன் போராட்டக்களத்திற்கு சென்ற நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு வர மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
அதனால் மருத்துவ குழுவினர் நிகழ்விடத்தில் வைத்து முதலுதவி சிகிச்சை மற்றும் சோதனை அளித்துள்ளனர். தாயும் - சேயும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், ஆட்சியர் விரைந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.