ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கசாப்பு கடைக்காரர் தனது மூன்று வயது பெண் குழந்தையை கொடூரமாக கழுத்தறுத்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் சாந்தி குமார். இவர் அப்பகுதியில் கசாப்பு கடை நடத்தி வருகிறார். மதுப் பழக்கத்திற்கு அடிமையான சாந்தி குமார் மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. வழக்கம்போல் மது அருந்தி விட்டு வந்த அவர் நேற்று இரவு மனைவியுடன் தகராறு செய்திருக்கிறார். பின்னர் இருவரும் உறங்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை தனது மனைவியின் அருகில் உறங்கிக் கொண்டிருந்த மூன்று வயது பெண் குழந்தையை கத்தியால் கழுத்து அறுத்து கொடூரமாக படுகொலை செய்து இருக்கிறார் குமார். இது தொடர்பாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இறந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 வயது குழந்தை, தந்தையால் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.