எங்கள் காவல்துறை ஊழியர்கள் எப்போதும் தயக்கமின்றி சிறப்பாக செயல்படுகிறார்கள்.! பெருமையாக பேசிய பிரதமர் மோடி.!
காவலர் வீரவணக்க நாளையொட்டி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் காவலர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நமது நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் இன்று காவலர் வீரவணக்க நாளையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவலர் நினைவுச் சின்னங்களில் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது.
உயிர்நீத்த போலீசாருக்கு அந்தந்த பகுதி காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் வீரவணக்கம் செலுத்துகின்றனர். இந்தநிலையில், டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவுச் சின்னத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் இருந்து, கொடூரமான குற்றங்களைத் தீர்ப்பது வரை, பேரழிவு காலங்களில் உதவி செய்வதிலிருந்து, கொரோனா உடன் போராடுவது வரை, எங்கள் காவல்துறை ஊழியர்கள் எப்போதும் தயக்கமின்றி தங்கள் சிறந்ததை வழங்குகிறார்கள். குடிமக்களுக்கு உதவ அவர்களின் விடாமுயற்சி மற்றும் தயார்நிலை குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.