மோடி தக்காளி அமோக விற்பனை; விவசாயியின் புதிய முயற்சிக்கு கிடைத்த வெற்றி.!
modi thakkali - anthira farmer - good sales
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளியைச் சேர்ந்தவர் ரசார்லா சிவக்குமார் ரெட்டி. 38 வயது நிரம்பிய விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிட்டுள்ளார். எப்பொழுதும் சராசரி வருமானமே பார்த்து வந்த இவருக்கு எப்படியாவது அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்று தோன்றியுள்ளது.
இந்நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வித்தியாசமாக யோசிக்கத் தொடங்கினார். இந்நிலையில் மிகவும் பிரபலமான அரசியல் தலைவராக இருக்கும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை பயன்படுத்தி அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்று முடிவு செய்தார்.
அந்த சமயத்தில் கர்னூலை சேர்ந்த ஜ.பி. ஏர்கோ புரோடியூசர்ஸ் (JP Agro Producers) என்ற நிறுவனம் வித்தியாசமான முறையில் தக்காளிகளை பயிரிட்டால் 25% கூடுதல் லாபம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனத்தை அணுகி தனது யோசனையை தெரிவித்த சிவக்குமாருக்கு, பிரதமர் பெயர் பொறித்த அச்சு வழங்கப்பட்டுள்ளது.
அவர் விளைவித்த தக்காளிகளுக்கு ஒரு பக்கம் இந்திய வரைபடமும், மறுபக்கம் பிரதமர் மோடி பெயரும் பொறித்த இதய வடிவிலான பிளாஸ்டிக் அச்சை பயன்படுத்தியுள்ளார். மோடி பெயரை அச்சடித்து விற்பனை செய்வதன் மூலம், தக்காளிக்கு அதிக லாபம் கிடைத்துள்ளதாகவும் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.