பயணிகள் பயணித்த இந்திய விமானத்தை தடுத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்!
pakistan flifgt intercept to spicejet
டெல்லியிலிருந்து, ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூல் நகருக்குச் சென்ற ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானத்தை, பாகிஸ்தான் விமானப்படை போர்விமானங்கள், கடந்தமாதம் திடீரென இடைமறித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி அன்று டெல்லியிலிருந்து, 120 பயணிகளுடன், ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகருக்கு, எஸ்.ஜி-21 என்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் பறந்துள்ளது. அந்த சமயத்தில் பாகிஸ்தான் வான்வெளியில் பறந்து சென்றபோது திடீரென அங்கு பாகிஸ்தான் விமானப்படையின் இரண்டு F-16 ரக போர் விமானங்கள், ஸ்பைஸ் ஜெட் விமானத்தை இடைமறித்து பறக்கும் உயரத்தை குறைக்குமாறு விமானிகளிடம் கூறியுள்ளனர். மேலும் விமானம் குறித்த தகவல்களை தருமாறு கூறியிருக்கின்றனர்.
இது பயணிகள் விமானம், போர் விமானம் இல்லை என்று ஸ்பைஸ்ஜெட் விமானி தெரிவித்தார். அதை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் போர் விமானங்கள், ஆப்கானிஸ்தான் எல்லை வரை, இந்திய விமானத்துக்கு பாதுகாப்பாகச் சென்றன.
ஒவ்வொரு விமானத்திற்கும், பன்னாட்டு சேவையின்போது, ஒரு பொது குறியீடு வழங்கப்படும். அந்த வகையில், ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்கு SG என்று வழங்கப்பட்டிருந்த குறியீட்டை, இந்திய விமானப்படை விமானங்களுக்கான "IA" என்ற குறியீடாக, பாகிஸ்தான் வான்வெளி போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் தவறுதலாக புரிந்துகொண்டு ஏற்பட்ட குழப்பத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.