உயிரை காப்பாற்றிய இந்திய இராணுவத்தினருக்கு முத்த மழை.. பாறையிடுக்கில் சிக்கிய இளைஞர் நெகிழ்ச்சி.!
உயிரை காப்பாற்றிய இந்திய இராணுவத்தினருக்கு முத்த மழை.. பாறையிடுக்கில் சிக்கிய இளைஞர் நெகிழ்ச்சி.!
கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 28). இவர் தனது நண்பர்களுடன் மலம்புழாவில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்த நிலையில், மலையில் இருந்து கீழே இறங்கும் போது கால் இடறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கி உயிருக்கு போராடினார்.
மேலும், நல்ல வேலையாக அவர் மலைமேல் இருந்து கீழே விழாமல், பாறைப்பகுதியோடு உருண்டு வந்ததால் கிடைத்த வாய்ப்பை உபயோகம் செய்து, பாறையின் இடுக்கில் பயத்தின் உச்சத்தில் அமர்ந்திருந்தார். பாபுவுடன் சென்றவர்களால் அவரை மீட்க இயலாத நிலையில், வனத்துறையினருக்கு நண்பர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்களால் பாபு சிக்கியுள்ள இடத்தினை கண்டறிய இயலாததால், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் கடலோர காவற்படை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு பணி நடந்துள்ளது. இந்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால், கேரள அரசு இளைஞரை மீட்டுத்தர இராணுவத்திடம் கோரிக்கை வைத்தது.
கேரள அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இராணுவம், ஊட்டி குன்னூர் இராணுவ கல்லூரியில் இருந்த மீட்பு குழுவை மலம்புழாவுக்கு அனுப்பி வைத்தது. இராணுவ ஹெலிகாப்டரில் சம்பவ இடத்திற்கு விரைந்த இந்திய இராணுவத்தினர் கயிறு கட்டி இளைஞரை பத்திரமாக மீட்டனர். மேலும், 2 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி தவித்து வந்த இளைஞருக்கு, அங்கேயே உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது.
தன்னை மீட்க வந்த அதிகாரிகளுக்கு இன்முகத்துடன் நன்றி தெரிவித்த இளைஞர் பிரபு, அவர்களுடன் மகிழ்ச்சியாக பேசி, தனது அன்பை வெளிப்படுத்தும் பொருட்டு இராணுவத்தினருக்கு முத்தம் வழங்கினார். இராணுவத்தினரும் இளைஞருடன் நன்றாக பேச்சு கொடுத்து, அவரை உற்சாகப்படுத்தி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.