கூடுதல் கல்வி கட்டணம் எதிரொலி! போராட்டத்தில் குதித்த பெற்றோர்
Parents protest against private school
புனேவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணதத்தை செலுத்த தவறிய மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கியதால், மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
புனே ஹடாப்ஸர் பகுதியில் அமனோரா பாரக் டவுனில் அமைந்துள்ளது அமனோரா தனியார் பள்ளி. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி சில மாணவர்களின் பெற்றோர் சில நாட்களுக்கு முன்பு கல்வி அமைச்சரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் பள்ளியின் முன்பு போராட்டத்திலும் குதித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி நிர்வாகம் 486 மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை தபால் வழியாக அவர்களது இல்லத்திற்கே அனுப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் பெற்றோர் இன்றும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதுகுறித்து ஒனு மாணவரின் தந்தை தெரிவிக்கையில், "இந்த பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி கட்டணமானது உயர்த்தப்படுகிறது. அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதலாக இவர்கள் கட்டணம் வசூலிக்கின்றனர்.
ஒரு ஆண்டிற்கு 85000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கின்றனர். அதில் வெறும் 49950 ரூபாய்க்கு மட்டுமே சரியான கண்க்கு காணபிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை என்னவாகிறது என்றே தெரியவில்லை. பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் உள்ள ஒருசில பணக்காரர்களின் உதவியுடன் தான் பள்ளி நிர்வாகம் இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே போராட்டத்தில் இறங்கியுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியாக கட்டணம் செலுத்தாத மாணவர்களை தான் பள்ளியை விட்டு நீக்கியுள்ளோம். இவர்களால் பள்ளி நிர்வாகம் கடுமையான நிதி பற்றாக்குறையை சந்தித்துள்ளது. நீக்கப்பட்ட மாணவர்கள் நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்தினால் மீண்டும் பள்ளியில் சேர்த்துக்கொள்ள தயார்" என தெரிவித்துள்ளது.