"புதிய சாதனை நிகழ்த்துங்கள்" - தோனி, கோலி, ரோகித்திற்கு பிரதமர் மோடி கட்டளை
Pm asks Indian cricketers to set record in election
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி வீரர்களான தோனி, கோலி மற்றும் ரோகித்திடம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிகமானோர் வாக்களித்து புதிய சாதனை படைக்க உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரும் ஏப்ரல் மாதம் 11 தொடங்கி மே மாதம் 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் மே 23 ஆம் தேதி வெளியிடப்படும்.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் வெறும் 66.40% சதவிகித வாக்காளர்களே வாக்களித்துள்ளனர். இந்நிலையில் வரவிருக்கும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் இந்த வாக்காளர்கள் சதவிகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
எனவே வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துரைக்க பிரபலங்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுக்க துவங்கியுள்ளார். இதன் ஒரு முயற்சியாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தோனி, கோலி மற்றும் ரோகித்திற்கு ட்விட்டர் மூலம் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் ட்விட்டரில், "அன்பிற்குரிய தோனி, கோலி மற்றும் ரோகித் அவர்களே, நீங்கள் கிரிக்கெட் மைதானத்தில் எப்போதும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றீர்கள். ஆனால் இந்தமுறை 130 கோடி இந்தியர்களையும் வாக்களிக்க ஊக்குவித்து, வரவிருக்கும் தேர்தலில் அதிகமான வாக்காளர்களை வாக்களிக்க செய்து புதிய சாதனை படைக்க செய்யுங்கள். இது மட்டும் அரங்கேறினால் மக்களாட்சி நிச்சயம் மலரும்" என அன்பு கட்டளை விடுத்துள்ளார்.