கர்ப்பிணி பெண் டிராக்டர் ஏற்றி கொலை: நிதி நிறுவன ஊழியர்களுக்கு வலைவீச்சு..!
கர்ப்பிணி பெண் டிராக்டர் ஏற்றி கொலை: நிதி நிறுவன ஊழியர்களுக்கு வலைவீச்சு..!
ஜார்க்கண்ட் மாநிலம், ஹசரிபாத் மாவட்டத்தில் உள்ள பரியநாத் கிராமத்தை சேர்ந்தவர் மிதிலேஷ் மேதா. விவசாயி. மாற்று திறனாளியான இவர் தனியார் நிதி நிறுவனத்தில் 3 லட்ச ரூபாய் கடன்பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார். கடன் தவணையை செலுத்தி வந்த நிலையில், ரூ.1.30 லட்சம் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, பாக்கி தொகை ரூ.1.30 லட்ச ரூபாயை மொத்தமாக செலுத்தும்படியும், இல்லையென்றால் டிராக்டரை திருப்பி எடுத்துக்கொள்வோம் என்றும் மிதிலேஷூக்கு நேற்று முன் தினம் தகவல் அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மிதிலேஷ் தனது ஊரில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது டிராக்டரை பார்க்க சென்றார். அவருடன் மிதிலேஷின் 3 மாத கர்ப்பிணியான மகளும் உடன் சென்றார்.
இருவரும் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, அங்கு ஏற்கனவே நிதி நிறுவன ஊழியர்கள் டிராக்டரை எடுத்து செல்ல தயாராகினர். அவர்களை தடுக்க மிதிலேஷின் மகள் முயற்சித்த போது, டிராக்டரை வேகமாக இயக்கி அவர் மீது மோதியுள்ளனர். டிராக்டர் மோதியதில் அதன் டயரில் சிக்கிய மிதிலேஷின் மகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதன் பின்னர், நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கர்ப்பிணி பெண்ணை டிராக்டர் ஏற்றி கொலை செய்துவிட்டு தப்பியோடிய நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.