சந்திரயான் தரையிறங்கிய தினம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மோடி: விஞ்ஞானிகள் உற்சாகம்..!!
சந்திரயான் தரையிறங்கிய தினம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மோடி: விஞ்ஞானிகள் உற்சாகம்..!!
நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய தினம் ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திரயான்-3 விண்கலம் நிலவினை ஆய்வு செய்ய கடந்த மாதம் 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் தேதி மாலை திட்டமிட்டபடி 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் கால் பதித்த 4வது நாடாகவும், தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடாகவும் இந்தியா சாதனை புரிந்தது.
இதனை தொடர்ந்து விக்ரம் லேண்டரில் இருந்து இறங்கிய பிரக்கியான் ரோவர் ஊர்தி நிலவில் தனது ஆய்வை தொடங்கியது. இந்த மிகப்பெரிய சாதனையை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. முன்னதாக ரஷ்யா நிலவின் தென் துருவத்தை நோக்கி அனுப்பிய லூனா-25 விண்கலம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி இன்று காலை பெங்களூர் வந்தடைந்தார். பெங்களூரு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டுவதற்காக பீனியாவில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு சென்றார்.
இஸ்ரோ மையத்திற்கு சென்ற பிரமருக்கு சந்திரயான்-3 லேண்டரின் சிறிய அளவிளான மாதிரி வடிவத்தை இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் சந்திராயன்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலும் இணைந்து வழங்கினர். இதனை தொடர்ந்து விஞ்ஞானிகளிடையே உரையாற்றிய பிரதமர் மோடி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடம், சிவசக்தி என்ற பெயரில் அழைக்கப்படும் என்றும் நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய தினம் ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்றும் கூறியுள்ளார்.