21 நாள் ஊரடங்கு.. EMI செலுத்துவோரின் நிலை என்னவாகும்.. பிரதமரிடம் வேண்டுகோள்!
Request to postpone emis
கொடிய கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இறுதியாக பிரதமர் மோடி ஏப்ரல் 15 வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துவிட்டார்.
மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் மக்களுக்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும் பிரதமர் உரையாற்றினார். இந்த ஊரடங்கு உத்தரவால் பலரது வருமானம் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
தற்போதைய காலச் சூழலில் ஒவ்வொரு மாதம் பிறக்கும் போதும் பலரும் கணக்கிடுவது இந்த மாதம் எவ்வளவு EMI மற்றும் கிரெடிட் கார்டு பில் செலுத்த வேண்டும் என்பது தான். இதைப் போன்ற கட்டணங்கள் வங்கிகளுக்கு மட்டுமல்ல பைனான்ஸ் நிறுவனங்கள், கந்துவட்டிக்காரர்கள் என பலருக்கும் மக்கள் மாதமாதம் செலுத்த வேண்டியுள்ளது.
தற்போது இந்த ஊரடங்கு உத்தரவால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாத சூழலிலும் வருமாணம் ஈட்ட முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். நிச்சயம் அவர்களுக்கான மாதாந்திர தவனையை செலுத்துவது பலருக்கும் சிரமம் தான்.
இதில் வங்கியில் கடன் பெற்று சரியான காலக்கட்டத்தில் EMI செலுத்தாவிட்டால் தனி நபரின் சிபில் ஸ்கோர் குறைந்துவிடும். இதனால் எதிர்காலத்தில் அவர்கள் வங்கிகளில் கடன்பெற சிரமம் ஏற்படும்.
மக்களின் இந்த சிரமங்களை கருத்தில் கொண்டு மாதாந்திர தவணைகளை திரும்ப செலுத்துவதை அரசே முன்வந்து அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைக்க வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும் என பலரும் பிரதமர் நரேந்திர மோடியிடம் ட்விட்டரில் கேட்டுள்ளனர். மக்களின் இந்த சிரமத்தை பிரதமர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.