வளர்ச்சித் திட்ட கேள்விக்கு ஆணுறை அனுப்பிய மாவட்ட நிர்வாகம்; வெளியான பரபரப்பு சம்பவம்.!
right to information act - rajastan
வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டவர்களுக்கு ஆணுறை அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அனுமான்கார்க் மாவட்டத்தில் ஷானிபாரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர்கள் மனோகர் லால் மற்றும் விகாஸ் சவுத்ரி. இவர்கள் இருவரும் அவர்களது ஒன்றியத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு மனு அளித்தனர்.
2005 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவலை பெறும் நிர்வாகம், தங்களிடம் கோரிக்கை மனு வந்து சேர்ந்த நாளிலிருந்து 40 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
இதனால் தங்களுக்கு உரிய பதில் தபாலில் வந்து சேரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர்கள் உட்பட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக பயன்படுத்தப்பட்ட ஆணுறை தபாலில் வந்து சேர்ந்துள்ளது.
இது ராஜஸ்தான் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அம்மாநில மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.