வன்முறைக்கு இடையே மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்..!!
வன்முறைக்கு இடையே மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள்..!!
சென்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதியிலிருந்து மணிப்பூரில் தனிப்பட்ட இரு சமூகத்தினருக்கு இடையே பெரும் கலவரம் ஏற்பட்டு வருகிறது. கலவரத்தில் 100 பேர் பலியாகி இருக்கும் இந்த நிலையில்,இதை தொடர்ந்து மேலும் அங்கு வன்முறை அடிக்கடி பரவி வரும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்ப முடியாமல் அச்சத்துடன் உலாவி வருகிறார்கள்.
மேலும் இந்த வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது இதனை தடுத்து நிறுத்துவதற்காக, கடந்த மாதம் மூன்றாம் தேதியில் சமூக வலைத்தளங்களை முடக்கும் வகையில் இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, உள்துறை மந்திரி அமித்ஷா கேட்டதற்கிணங்க குகி பழங்குடியினரின் இரண்டு கிளை அமைப்புகள் தேசிய நெடுஞ்சாலையில் நடத்திய மறியல் போராட்டத்தினை வாபஸ் பெற்றுக் கொண்டதாக நேற்று கூறப்பட்டது.
மேலும் இக்கலவரத்தால் தலைநகர் இம்பால் மேற்கு மாவட்டத்தில் 144 தடை போடப்பட்டிருந்ததை தொடர்ந்து, இன்று காலை முதல் மாலை வரை தற்காலிக 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில், மீண்டும் ஒரு கலவரம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரின், பிஷ்ணுப்பூர் என்னும் மாவட்டத்திற்கு உட்பட்ட கொய்ஜுமந்தபி என்னும் கிராமத்தில் ஒரு வன்முறை பரவி வருகிறது.
இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பிற்காக அமைத்த பதுங்கு குழியை காப்பதற்காக நியமனம் செய்யப்பட்டிருந்த கிராமவாசிகளுள் சிலருக்கும் மற்றும் அடையாளம் தெரியாத ஒரு மர்ம கும்பலுக்கும் இடையே திடீரென்று துப்பாக்கி சூடு சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த சண்டையில் கிராம தன்னார்வலர்கள் 3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட்டுள்ளதாக, தகவல் வந்துள்ளது. மேலும் இந்த கலவரத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் அந்த மாநில முதலமைச்சர் பைரன் சிங் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி இருந்தார். அதில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர். அதில் வன்முறை குழுக்கள் ஏற்படுத்தி உள்ள பதுங்கு குழிகளை அழிக்க வேண்டும் என்றும், மீண்டும் பள்ளிகளை திறக்கவும், விவசாயிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளித்து விவசாயத்தை மீண்டும் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படியில் தற்போது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. குறைவான மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்த போதிலும் மாநில அரசு எடுத்துள்ள இந்த பள்ளி திறப்பு முடிவினை பெற்றோர்களும், ஆசிரியர்களும் வரவேற்றுள்ளனர்.