உருவானது நிசார்கா புயல்! எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
Storm alert
அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் புயலாக உருமாற உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு அரபிக்கடலைச் சார்ந்துள்ள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுப்பெற்று கிழக்கு மைய அரபிக்கடலில் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது. இந்தநிலையில் இன்று பிற்பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறினால் அதற்கு நிகர்சா என்று பெயரிடப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
புயலாக மாறும் பட்சத்தில் வடக்கு மகராஷ்டிரா தெற்கு குஜராத் இடையே நாளை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் காரணமாக கோவா , மகாராஷ்டிரா , குஜராத் , மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த புயலானது பிற்பகல், மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு மத்தியில் கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக மணிக்கு 125 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். மேலும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு அரபிக்கடலைச் சார்ந்துள்ள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.