பெற்ற தாயை கவனிக்காமல் சித்திரவதை செய்த மகன்.. குழந்தைகளுடன் வீட்டை காலி செய்யுமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்..!
பெற்ற தாயை கவனிக்காமல் சித்திரவதை செய்த மகன்.. குழந்தைகளுடன் வீட்டை காலி செய்யுமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்..!
மும்பையில் பரேல் என்ற இடத்தில் உள்ள சம்படா ஹைட்ஸ் என்ற குடியிருப்பில் தனது தாய், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருபவர் துகாராம். இவர்கள் வசிக்கும் இந்த வீடானது துகாராவின் தாய் பெயரில் உள்ளது என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் துகாரமும் அவரது மனைவியும் சேர்ந்து துகாராமின் தாயாரை மிக மோசமாக நடத்தி சித்திரவதை செய்துள்ளனர். இதனால் வேதனை அடைந்த துகாராமின் தாயார் தனது மகனை வீட்டை விட்டு காலி செய்யும்படி தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் துகாராமை வீட்டை காலி செய்யுமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து துகாராம் இந்த உத்தரவை எதிர்த்து மும்பை ஹைக்கோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கானது நீதிபதி சந்தீப் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் துகாராமின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துகாரஙம் தங்குவதற்கு வேறு வீடு இல்லை என்றும் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அவர் எங்கு சென்று தங்க முடியும் என்றும் மேலும் மனுதாரர் அவரது தாயாரை நல்ல முறையில் கவனித்துக் கொள்வார் என்றும் வாதிட்டார்.
இவை ஒருபுறம் இருக்க துகாராமின் தாயார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துகாராம் சஹாப்பூரில் ஒரு படுக்கை கொண்ட வீடு வாங்கி இருப்பதாகவும் அது மட்டுமல்லாமல் அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தன் தாயாரை மோசமாக நடத்தி உள்ளார் என்றும் வாதிட்டார். மேலும் துகாராம் அவரது தாயாரின் வங்கி கணக்கில் இருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு உள்ளார் என்றும் தாயாரின் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி துகாராம் தனது தாயார் பெயரில் உள்ள வீட்டை உடனே காலி செய்ய வேண்டும் என்றும் தன்னுடன் யார் இருக்க வேண்டும் இருக்க கூடாது என்று அவர் தாயார் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் துகாராம் தனது தாயாரின் செலவிற்கு ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தங்குவதற்கு வேறு வீடு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.