இந்திய தூதரகம், பிரதமர் மோடிக்கு நன்றி.. உக்ரைனில் மீட்கப்பட்ட பாக். மாணவி வீடியோ.!
இந்திய தூதரகம், பிரதமர் மோடிக்கு நன்றி.. உக்ரைனில் மீட்கப்பட்ட பாக். மாணவி வீடியோ.!
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா படையெடுத்து சென்றுள்ள நிலையில், 12 நாட்களை கடந்தும் போர் தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட அதன் நட்பு நாடுகள் இராணுவ தளவாடங்கள், பொருளாதார நிதியுதவியை அளித்துள்ளது.
அதே சமயத்தில், ரஷியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் கேள்விக்குறியாகும் நிலையில், அதனை சிந்திக்காமல் நாங்கள் போர் தொடுக்கவில்லை என்பதை போல, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அமைதியாக இருந்து வருகிறார். மேலும், உக்ரைனை தொடர்ந்து சரணடைய வற்புறுத்தி இருக்கிறார்.
உக்ரைன் நாட்டில் வசித்து வரும் இந்தியர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், உக்ரைன் மற்றும் ரஷிய நாடுகளின் ஒத்துழைப்போடு இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு வருகிறது. உக்ரைனில் உள்ள பலவேறு நகரங்களில் இருந்து எல்லைப்பகுதிக்கு செல்ல இந்திய மாணவர்கள் இந்திய தேசிய கொடியை பயன்படுத்தி வருகின்றனர்.
அதனைப்போல, உக்ரைனில் சிக்கியுள்ள வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் நாட்டினை சேர்ந்த கல்லூரி மாணவர்களும் இந்திய தேசிய கொடியை உபயோகம் செய்து எல்லைப்பகுதிக்கு பாதுகாப்பாக செல்வதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய தூதரக அதிகாரிகளும் உதவி செய்து வருகிறார்கள்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி நலனை கருத்தில் கொண்டு, மீட்பு விவகாரத்தில் இருநாட்டு தூதரக அதிகாரிகளும் பல்வேறு இடங்களில் ஒன்று சேர்ந்து பணியாற்றுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த மாணவி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டினை சேர்ந்த மாணவி அஸ்மா ஷபிக் உக்ரைனின் கியூ நகரில் இருந்து படித்து வரும் நிலையில், போர் சூழலால் அவரும் பாதிக்கப்பட்டார். அங்கிருந்து அவரை உக்ரைனின் எல்லைப்பகுதிக்கு பாதுகாப்பாக வர இந்திய தூதரக அதிகாரிகள் உதவி செய்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவித்து அவர் வீடியோ பதிவு செய்துள்ளார். விரைவில் அவர் பாகிஸ்தான் அனுப்பி வைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.