என்கவுண்டரில் காவலர் பலி., திருமணத்திற்காக காத்திருந்த பெற்றோர், இறுதிச்சடங்கு செய்த துயரம்.!
என்கவுண்டரில் காவலர் பலி., திருமணத்திற்காக காத்திருந்த பெற்றோர், இறுதிச்சடங்கு செய்த துயரம்.!
ரௌடிகள் நடத்திய துப்பாக்கிசூட்டில் திருமணத்தை சில மாதங்களில் எதிர்கொள்ள வேண்டிய காவலர் பலியான சோகம் உ.பி-யில் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, கண்ணுஜ் பகுதியை சேர்ந்தவர் அசோக் யாதவ். இவரின் மகன் அபய் யாதவ். இருவரும் பல கொலை, கொள்ளை குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் ஆவார்கள்.
சம்பவத்தன்று, காவல் துறையினர் இவர்கள் இருவரையும் கைது செய்ய அசோக் யாதவ்வின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுத்த குற்றவாளிகள், காவல் துறையினரை எதிர்த்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிசூட்டில், நிகழ்விடத்திற்கு தனது தலைமை அதிகாரிகளுடன் விரைந்த காவலர் சச்சின் ரதி என்பவரின் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. அவரின் தொடை பகுதியில் குண்டு பாய்ந்து, இரத்தம் அதிகம் வெளியேறியுள்ளது.
உடனடியாக கூடுதல் காவல் துறையினர் மற்றும் அவசர மருத்துவ குழுவினர் நிகழ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். சம்பவத்தின் முடிவில் குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டாலும், காவலர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மறைந்த காவலர் சச்சின் ரதி (வயது 30), அங்குள்ள முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 2019ல் காவல்துறையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
30 வயதாகும் சச்சின் ரதிக்கு வரன் பார்த்த பெற்றோர், பிப்ரவரி மாதம் திருமணம் செய்ய தேதி குறித்துள்ளனர். மகனின் திருமணத்தை எதிர்நோக்கி காத்திருந்த பெற்றோர், இறுதியில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை செய்ய வேண்டிய சோகத்திற்கு தள்ளப்பட்டனர்.
காவலரை கொலை செய்த தந்தை மற்றும் மகன் கைது செய்யப்பட்டு, காவல் துறையினரின் விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளனர்.