ஸ்டார் ஹோட்டல் மேலாளர் டூ ஜொமாடோ டெலிவரி பாய்.. விபத்தில் பரிதாபமாக மரணம்.! கொரோனா அலையால் சோகம்.!!
ஸ்டார் ஹோட்டல் மேலாளர் டூ ஜொமாடோ டெலிவரி பாய்.. விபத்தில் பரிதாபமாக மரணம்.! கொரோனா அலையால் சோகம்.!!
தனியார் நட்சத்திர விடுதியில் மேலாளராக பணியாற்றி, கொரோனாவால் வேலையை இழந்த நபர், Zomato-வில் உணவு டெலிவரி செய்யும் நபராக மாறி விபத்தில் மரணித்துள்ள சோகம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியை சார்ந்தவர் சலீல் திரிபாதி (வயது 37). இவரின் மனைவி ரோகினி. இந்த தம்பதிகளுக்கு 10 வயதுடைய மகன் இருக்கிறார். சலீல் திரிபாதி தனது குடும்பத்துடன் டெல்லியில் உள்ள புத் விஹார் பகுதியில் வசித்து வந்த நிலையில், முதல் கொரோனா அலைக்கு முன்னர் நட்சத்திர உணவகத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். கொரோனா பரவலை தொடர்ந்து நட்சத்திர உணவகம் மூடப்பட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் சார்பில் இறுதியாக பணியாற்றிய மாத ஊதியம் வழங்கப்படவில்லை.
இதனால் சொந்த ஊருக்கு சென்ற திரிபாதி, ஊரடங்கு தற்காலிகமானது என எண்ணி அங்கேயே இருந்துள்ளார். பின்னர், ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், அவரின் சம்பாத்தியத்தில் பாதி ஊரடங்கில் செலவாகியுள்ளது. இறுதியில் வருமானத்தை இழந்து கஷ்டப்பட்ட திரிபாதி, ஜுமாடோ நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் நபராக பணியாற்ற தொடங்கியுள்ளார். கடந்த சனிக்கிழமை உணவு டெலிவரி செய்ய சென்ற போது, மதுபோதையில் இருந்த காவல் அதிகாரி ஜூல் சிங் இயக்கி வந்த காவல் வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
முதலாவது கொரோனா அலையால் வேலையை இழந்த சலீல் திரிபாதி, இரண்டாவது அலை ஏற்படுவதற்கு முன்னதாக அவரின் தந்தையையும் இழந்துள்ளார். டெல்லியில் பள்ளிப்படிப்பை முடித்த சலீல் திரிபாதி, மீரட்டில் உள்ள ஜெ.பி இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மண்ட் கல்லூரியில் பயின்றார். கடந்த 2003 ஆம் வருடம் முதல் பணியாற்ற தொடங்கிய திரிபாதி, பல்வேறு பிரபலமான நட்சத்திர உணவகத்தில் பணியாற்றி இருக்கிறார். இறுதியாக கொரோனா பரவலால் தனது நட்சத்திர விடுதி மூடப்பட்ட நிலையில், அந்த நிறுவன உரிமையாளர்கள் ஊதியமும் கொடுக்கவில்லை. சலீல் இழகிய மனம் கொண்டவராக இருந்ததால், ஊதியம் கேட்டு புகாரும் அளிக்காமல் இருந்துள்ளார்.
இறுதியாக ஜுமாடோ நிறுவனத்தில் பணியாற்ற தொடங்கிய சலீல் திரிபாதி, இரவு பகலாக கடுமையாக உழைத்துள்ளார். மேலும், கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாடு, மக்களின் கொரோனா அச்சம் காரணமாகவும் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதித்த சலீலுக்கு வருமானம் என ரூ.10 ஆயிரம் மட்டுமே கிடைத்துள்ளது. குழந்தைக்கு கல்வி நிறுவனத்தில் கட்டணம் செலுத்த இயலாமல் தவித்து வந்த நிலையில், இறுதியில் விபத்தில் அவர் மரணித்து இருக்கிறார்.
இந்த விஷயம் தொடர்பாக ஜுமாடோ நிறுவனம் தெரிவிக்கையில், "சலீலின் குடும்பத்தினருக்கு நாங்கள் ஆறுதல் தெரிவிக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு நிறுவனம் சார்பில் இழப்பீடு வழங்கப்படும். அவரது குடும்பத்தினரை எங்களின் அதிகாரி சந்தித்து ஆறுதல் கூறி வந்துள்ளார். சலீலின் குடும்பத்திற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்" என்று தெரிவித்தது.