இஸ்லாமிய மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடத்துனர் கொலை முயற்சி: 20 வயது கல்லூரி மாணவர் அதிர்ச்சி செயல்.. உ.பியில் பதற்றம்.!
இஸ்லாமிய மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடத்துனர் கொலை முயற்சி: 20 வயது கல்லூரி மாணவர் அதிர்ச்சி செயல்.. உ.பியில் பதற்றம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ப்ரயக்ராஜ் மாவட்டம், ஹாஜிகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் முகமது யூனுஸ். இவரின் மகன் முகம்மது லரேப் ஹஷ்மி (வயது 20). பி.டெக் பயின்று வருகிறார்.
சம்பவத்தன்று ஹஷ்மி பேருந்தில் பயணம் செய்தபோது, நடத்துனராக பணியாற்றிய ஹரிகேஷ் விஸ்வகர்மா என்பவருடன் பயணசீட்டு எடுப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது.
அப்போது, ஹஷ்மி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நடத்துனரை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளார். இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நடத்துனர், உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ப்ரயக்ராஜ் மாவட்ட காவல் துறையினர், ஹஷ்மியை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே, பேருந்து பயணத்தின்போது நடத்துனர் முஸ்லீம் குறித்து அவதூறாக பேசியதாகவும், அதனாலேயே தான் அவரை தாக்கினேன். அவர் கட்டாயம் இறந்துவிடுவார் எனவும் ஹஷ்மி பேசிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இந்த வீடியோ ஹஷ்மி பயின்று வரும் கல்லூரியில் பதிவு செய்யப்பட்டது உறுதியாகவே, அதிகாரிகள் அங்கு விரைந்தனர். கல்லூரி வளாகத்திற்குள் பதுங்கியிருந்த ஹஷ்மி காவல் துறையினரை பார்த்ததும் தப்பிச்செல்ல முயற்சித்தார்.
இதனையடுத்து, காவல் துறையினர் காலில் ஹஸ்மியை சுட்டுப்பிடித்தனர். அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், சில வடஇந்திய ஊடகங்கள் ஹஸ்மிக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகி இருப்பதால், காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணை தொடருகிறது. ஹஸ்மியின் குடும்பத்தினரும் மாயமாகி இருக்கின்றனர்.