நீ முஸ்லீம், கடைக்கு இந்து பெயர்?.. லவ் ஜிகாத்துக்கு சப்போர்ட்?.. ஜூஸ் கடை சூறையாடல், பரபரப்பு சம்பவம்.!!
நீ முஸ்லீம், கடைக்கு இந்து பெயர்?.. லவ் ஜிகாத்துக்கு சப்போர்ட்?.. ஜூஸ் கடை சூறையாடல், பரபரப்பு சம்பவம்.!!
பழச்சாறு கடைக்கு லவ் ஜிகாத் ஆதரவாளர்கள் வந்து செல்கிறார்கள், கடையை நடத்துபவர் முஸ்லீம், கடைக்கு ஏன் இந்து பெயர்?. கடையை மூட வேண்டும் என வலதுசாரி அமைப்பினர் மிரட்டல் விடுத்த சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத் மாவட்டம், மஜ்ஹோலா நகரில் "நியூ சாய் ஜூஸ் சென்டர்" என்ற பெயரில் பழச்சாறு கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை ஷபு கான் என்பவர் கடந்த 15 வருடமாக நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த சில நாட்களுக்கு ன் நவநீத் சர்மா என்பவர் 25 க்கும் மேற்பட்ட ஆர்வலர்களுடன் வந்துள்ளார்.
நவநீத் சர்மா இந்துத்துவா அடிப்படைவாதி என்று கூறப்படும் நிலையில், ஷபு கானின் கடைக்கு வந்த நவநீத் சர்மா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 25 பேர் கடையை மூடக்கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். கடையில் இருந்து வீட்டிற்கு சாப்பிட சென்ற ஷபு கான், கடையின் பணியாளர்கள் தெரிவித்த தகவலின் பேரில் விரைந்து வந்துள்ளார். அப்போது, வலதுசாரி அமைப்பினர் ஷபு கானின் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஷபு கான், எதற்காக இவ்வாறு செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரை முதலில் தாக்கிய நபர்கள், "நீ முஸ்லீம், கடைக்கு ஏன் சாய் என பெயர் வைத்துள்ளாய்? இந்த கடை லவ் ஜிகாத்துக்கு தூது மையமாக இருக்கிறது. உனது கடைக்கு லவ் ஜிகாத்துக்கு ஆதரவு கூறும் பலரும் வந்து செல்கிறார்கள். நீ உடனடியாக கடையை மூடிவிட்டு வேறு தொழில் செய்துகொள்" என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகவே, காவல் துறையினர் விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் தெரிவிக்கையில், "வலதுசாரி அமைப்பை சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று பிரச்சனை செய்துள்ளனர். நவநீத் சர்மா உட்பட 25 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் துறையினர் பாதிக்கப்பட்ட கடையின் உரிமையாளரான ஷபு கானை தொடர்பு கொண்டு, "நீங்கள் கடையின் பெயரை மாற்றி வையுங்கள். அவர்கள் தொடர்ந்து பிரச்சனை செய்ய வாய்ப்புள்ளதால், உங்களின் வியாபாரமும் கெட்டுவிடும். அதனை தவிர்க்க கடையின் பெயரை வேறு ஏதேனும் மாற்றி வையுங்கள்" என்று கூறியதாகவும் தெரியவருகிறது.
வலதுசாரி பற்றுக்கொண்ட நவநீத் சர்மா வீடியோவில் பேசுகையில், "மொராதாபாத் நகரில் உள்ள கடைகளில், முஸ்லீம்கள் உரிமையாளராக இருக்கும் கடையில் இந்து தெய்வங்களின் பெயர் வைக்க கூடாது. அவ்வாறு வைத்தால் கடையை நடத்த விடமாட்டோம். நீங்கள் கடையை மூடிவிடுங்கள்" என்றும் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.