ஆட்டோ ஓட்டுனருடன் இன்ஸ்டா காதலால் ஓட்டம் பிடித்த இளம்பெண்.. காவல் நிலையத்தில் 5 மாத குழந்தையுடன் பாசப்போராட்டம்.!
ஆட்டோ ஓட்டுனருடன் இன்ஸ்டா காதலால் ஓட்டம் பிடித்த இளம்பெண்.. காவல் நிலையத்தில் 5 மாத குழந்தையுடன் பாசப்போராட்டம்.!
கணவர், அன்பான 5 மாத பச்சிளம் குழந்தை இருக்க, இன்ஸ்டாகிராம் காதலை நம்பி ஆட்டோ ஓட்டுனருடன் பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், பாபுஷாபாளையா பகுதியில் வசித்து வரும் இளைஞர், இருசக்கர வாகன ஷோ ரூமில் பணியாற்றி வருகிறார். கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக இளைஞர் 20 வயதுடைய இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணத்தை தொடர்ந்து கணவன் - மனைவியாக தம்பதி வாழ்ந்து வந்த நிலையில், 5 மாத பெண் குழந்தை இருவருக்கும் உள்ளது.
இந்நிலையில், குழந்தை பிறந்ததற்கு பின்னர் மனைவிக்கு கணவன் செல்போன் வாங்கி பரிசளித்த நிலையில், பெண் சமூக வலைத்தளத்தை உபயோகம் செய்ய தொடங்கியுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்ணுக்கும் - குடியாத்தத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் வழியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது பின்னாளில் இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
கடந்த 14 ஆம் தேதி பெண்மணி தனது 5 மாத குழந்தையினை தவிக்கவிட்டு ஆட்டோ ஓட்டுனருடன் குடியாத்தத்திற்கு சென்றுள்ளார். கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்ற மனைவி நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த கணவர் பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதற்கிடையில், குடியாத்தம் ஆட்டோ ஓட்டுநர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று பெங்களூர் பெண்ணும் - நானும் திருமணம் செய்துகொண்டோம், எங்களுக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும் என்று மனு வழங்கியுள்ளார். மனுவை பெற்ற அதிகாரிகள் பெண்ணின் உறவினர்களை அழைக்க வேண்டும் என்று கூறியபோது, பெண்ணுக்கு உறவினர்கள் கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.
இதில் எதோ மர்மம் உள்ளது என்று உணர்ந்த காவல் துறையினர் பெண் தொடர்பாக விசாரணை செய்கையில், இளம்பெண்ணிற்கு திருமணம் முடிந்து கணவர் மற்றும் 5 மாத குழந்தை இருப்பது உறுதியானது. பெங்களூர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, பெண்ணின் கணவர், குழந்தை, அவரின் தாய் ஆகியோர் குடியாத்தத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
5 நாட்களாக தாயை தேடி கிடந்த பிஞ்சு, காவல் நிலையத்தில் தாயை கண்டதும் கதறி அழுதது. முதலில் ஆட்டோ ஓட்டுனருடன் தான் இருப்பேன் என அடம்பிடித்த பெண்மணி, குழந்தையின் அழுகுரல் கேட்டு மனம்மாறி கணவருடன் பெங்களூர் செல்வதாக தெரிவித்தார். இதனையடுத்து, பெண்ணுக்கு அறிவுரை கூறிய அதிகாரிகள் பெங்களூர் அனுப்பி வைத்தனர். மேலும், ஆட்டோ ஓட்டுனரை கண்டித்து, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளனர்.