லடாக் எல்லையில் 6 கிலோமீட்டர் தூரம் வரை எதிரியின் இலக்கை தாக்கும் சக்தி வாய்ந்த பீரங்கிகளை நகர்த்தி வரும் இந்திய ராணுவம்!
Weapons in ladakh border
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ஆம் தேதி ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேரும், சீன தரப்பில் 35 பேரும் உயிர் இழந்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக இரு நாட்டு ராணு வ அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்தநிலையில், கல்வான் பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ள காட்சிகள் செயற்கைக் கோள் மூலமாக படமாக்கப்பட்டு வெளியாகி உள்ளன.
இந்தியா சீனா இடையே சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதும் இருநாடுகளும் படைகளைக் குவித்த வண்ணம் உள்ளன. இந்தியா தனது சக்தி வாய்ந்த T-90 பீஷ்மா பீரங்கிகளை அதிகளவுக்கு எல்லைக்கு நகர்த்தியுள்ளது. இந்த பீரங்கி, ஒருநிமிடத்தில் 60 குண்டுகளைப் பொழியும் ஆற்றல் மிக்கது. இந்த பீரங்கிகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை. 48 டன் எடை கொண்ட இந்த பீரங்கி ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்டதாகும்.
சீனாவுக்கு கடுமையான எச்சரிக்கையாக இந்த மாதத்தின் தொடக்கம் முதலே இந்த பீரங்கியை எல்லைக்கு அருகே நிறுத்தியுள்ள இந்திய ராணுவம் எல்லையில் எந்த அத்துமீறலையும் சகித்துக் கொள்ள முடியாது என்று எச்சரித்துள்ளது. சீனாவிடமும் இந்த பீரங்கிக்கு நிகராக டி 95 பீரங்கிகள் உள்ளன. ஆனால் இந்தியாவிடம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டி 90 பீரங்கிகள் உள்ளன. சீனாவிடம் 3500 பீரங்கிகள் மட்டுமே உள்ளன.