வன்முறையில் 10 பேர் எரித்துக்கொலை.. சொந்த கிராமத்தை கைவிட்டு செல்லும் மக்கள்.!
வன்முறையில் 10 பேர் எரித்துக்கொலை.. சொந்த கிராமத்தை கைவிட்டு செல்லும் மக்கள்.!
கிராம துணைத்தலைவர் கொலை விவகாரத்தில், வன்முறை கும்பல் 10 பேரை உயிருடன் எரித்து கொலை செய்த நிலையில், கிராம மக்கள் சொந்த கிராமத்தை கைவிட்டு செல்ல தொடங்கியுள்ள சோகம் நடந்துள்ளது.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பிர்பம் (Birbhum) மாவட்டம், ராம்பூர்ஹாத் - பர்ஷல் கிராம துணைத் தலைவர் பாது ஷெய்க். இவர் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருக்கும்போது, அவரை இடைமறித்த 4 பேர் கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த பாதுவை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யவே, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால், விவகாரம் கட்சியினருக்கு தெரியவந்துள்ளது.
பாதுவின் உறவினர்கள் அவரது உடலை சொந்த ஊரான போஃடூய் கிராமத்திற்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு திடீர் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது, மர்ம கும்பலொன்று வன்முறையில் ஈடுபட்டு, கிராமத்தில் உள்ள வீடுகளை சூறையாடி தீ வைத்து கொளுத்தியது.
இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும், வேறொரு வீட்டை சேர்ந்த 4 பேர் என 10 பேர் வரை உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்து செல்ல தொடங்கியுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக கிராமத்தை சேர்ந்த பெண்மணி தெரிவிக்கையில், "இந்த சம்பவத்தின் போது எனது சகோதரரும் உயிரிழந்துவிட்டார். நாங்கள் கிராமத்தை விட்டு செல்கிறோம். காவல் துறையினர் பாதுகாப்பு கொடுத்தாலும், மீண்டும் என்றோ ஒருநாள் இதே நிலைமை எங்களுக்கும் வரலாம்" என்று தெரிவித்தார்.