.
கேரளாவில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் கேரள மக்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்துகொடுக்கப்பட்டு வருகின்றன.
மழைவெள்ளத்தால் நிலைகுலைந்த கேரளாவை புணரமைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வெள்ளத்தை கேரளா எதிர்கொண்டு வருகிறது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2லட்சத்துக்கும் அதிகமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் குறித்து பேசிய கேரளா முதல்வர் பினராயி விஜயன், சில இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளதால் அங்கு மின்விநியோகம் அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். வெள்ளம் வடிந்தால் தான் முழுமையான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள முடியும்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கேரளாவை புணரமைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும், வெள்ள பாதிப்பில் இருந்து கேரளா விரைவில் மீளும் என நம்புவதாக கூறியுள்ளார்.