அயோத்தியில் புதிய மசூதி கட்ட எங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.?
Where is the new mosque in Ayodhya
நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு கடந்த நவம்பர் 9ஆம் தேதி அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயிலை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்தநிலையில் நாளை ஆகஸ்ட் 5ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்க உள்ளது. பிரதமர் மோடி ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.
அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்கள் மாற்று இடத்தில் மசூதி கட்டிக்கொள்வதற்காக 5 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்தநிலையில், மசூதி கட்டுவதற்காக மாவட்ட ஆட்சியரிடம் இருந்து 5 ஏக்கர் நிலத்துக்கான ஆவணங்களை இந்தோ - இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை என்ற அமைப்பினர் பெற்றுக் கொண்டனர். அதனடிப்படையில் மசூதி கட்டுவதற்கான 5 ஏக்கர் நிலத்தை, அயோத்தி மாவட்ட ஆட்சியர் அனூஜ் குமார் ஜா ஒப்படைத்தார். ஃபரிசாபாத்தில் உள்ள தன்னிப்பூர் கிராமத்தில்தான், மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது உத்தரப்பிரதேச அரசு.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை ஒட்டி அங்கு ஏற்பட்டுள்ள உற்சாகத்தைப் போல தன்னிப்பூர் கிராமத்தில் மசூதி வருவதை யாரும் அவ்வளவு உற்சாகத்துடன் அணுகவில்லை, அதற்கு காரணம் அயோத்தி நகரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தன்னிப்பூர் கிராமம் என கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். ஆனால் இங்கு மசூதி அமைந்தால் தங்களது கிராமத்துக்கு சர்வதேச அளவில் பெயர்கிடைக்கும் என்பதால் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம் என கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.