போலீஸ் பொதுமக்களின் நண்பன் என்பதை உணர்த்திய பெண் போலீஸ் அதிகாரி.! நெகிழ்ச்சி வீடியோ.!
ஆந்திராவில் அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை மீட்டு தனது தோளில் சுமந்துசென்று இறுதிச்சடங்கு செய்துள்ளார் பெண் உதவி ஆய்வாளர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்கு நகராட்சி அடவி கொத்தூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து வயல்வெளியில் சடலம் ஒன்று இருப்பதாக பொதுமக்கள் நேற்று முன்தினம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பெண் எஸ்ஐ சிரிஷா, சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார். பின்னர் அடையாளம் தெரியாதவரின் சடலத்தை மீட்டு இறுதிச்சடங்கு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.
ஆனால் சடலத்தை எடுப்பதற்கு பொதுமக்கள் யாரும் முன்வரவில்லை. அதேபோல் சடலம் இருந்த விவசாய நிலப்பகுதி, ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத இடத்தில் இருந்தது. இதனையடுத்து பெண் எஸ்ஐ சிரிஷா தனது உதவியாளருடன் வயல்வெளியில் கிடந்த முதியவரின் சடலத்தை தனது தோளில் சுமந்து 2கிலோ மீட்டர் தூக்கி கொண்டு சென்று இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்யப்பட்டது.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள், எஸ்ஐ சிரிஷாவின் சேவைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.