ஊரடங்கால் 7 நாட்கள், 1700கிமீ சைக்கிளிலேயே சொந்த ஊருக்கு திரும்பிய இளைஞர்!
Young
ஒடிசாவின் ஜேபூர், படாசூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் ஜெனா. 20 வயது நிறைந்த இவர் மகாராஷ்டிராவின் புனே நகரில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கொரோனோவால் கடந்த மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டநிலையில் அவர் பணியாற்றிய ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் அவரது செலவுக்கு போதிய பணம் இல்லாதநிலையில் அவர் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தார்.பின்னர் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சைக்கிளில் பயணத்தை தொடங்கினார்.
மேலும் ஊருக்கு செல்லும் வழி தெரியாமல், வரைபடமும் கிடைக்காதநிலையில், அவர் பெரிய ரயில் நிலையங்களின் பெயர்களை நியாபகத்தில் வைத்து, வழியில் மக்களிடம் கேட்டு பயணத்தை தொடர்ந்தார். அதனை தொடர்ந்து சோலாப்பூர் சென்று அங்கிருந்து ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் கடந்து ஒடிசா சென்றடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நாளொன்றுக்கு 16 மணி நேரம் சைக்கிள் மிதித்தேன். வழியில் கிடைத்த உணவுகளை வாங்கி சாப்பிட்டுக்கொண்டு வெயிலிலும், குளிரிலும் பயணம் மேற்கொண்டேன். 7 நாட்களில் சுமார் 1700 கி.மீ. தொலைவை கடந்து சொந்த ஊருக்கு வந்து சேர்ந்துவிட்டேன் என கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஊர் வந்தடைந்த மகேஷ் ஜீனாவை, கிராமத்தினர் ஊர் எல்லையில் மறித்து,பள்ளி கட்டிட முகாமில் தனிமைப்படுத்தினர். 14 நாட்களுக்குப் பிறகு அவர் வீடு செல்வார் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.