மண் சட்டியில் மணமணக்கும் நெத்திலி மீன் குழம்பு..! நாவூறும் சுவையில் செய்யலாம்.!
மண் சட்டியில் மணமணக்கும் நெத்திலி மீன் குழம்பு..! இதோ உங்களுக்கான ரெசிபி.. உடனே டிரை பண்ணுங்க..!
விடுமுறை காலங்களில், மண் சட்டியில் மீன் குழம்பு செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்போது சுவை அருமையாக இருக்கும். குறிப்பாக, மீன் குழம்பின் சுவை முதல் நாளை விட மறுநாள் தான் மிகுதியாக இருக்கும். மேலும், மீன்களில் பல வகைகள் உண்டு. உதாரணமாக மத்தி, கானாங்கெளுத்தி, ஜிலேபி, நெத்திலி போன்ற மீன் வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இப்போது, கிராமத்து சுவையில் நெத்திலி மீன் குழம்பு எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையானப் பொருட்கள் :
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சோம்பு - சிறிதளவு
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 15 ( நறுக்கியது )
பூண்டு - 20 பல்
தக்காளி - 2 ( அரைத்தது )
புளிக் கரைசல் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நெத்திலி மீன் - 1/2 கிலோ
கருவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
முதலில் அடுப்பைப் பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைக்கவும். பின்பு, வெந்தயம் 1/4 தேக்கரண்டி மற்றும் சீரகம் 1/2 தேக்கரண்டி சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். பின்பு, அதை அம்மியில் பொடியாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதையும் படிங்க: வாழ்க்கையில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்..! நரகமாக மாற்றி விடும்..!
இப்போது, ஒரு மண் சட்டியில் மூன்று தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் 1 தேக்கரண்டி கடுகு, சிறிது சோம்பு, 1/4 தேக்கரண்டி வெந்தயம் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளின் படி சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு, அரைத்த தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். இவைகள், அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் இதில் அரை கப் புளிக் கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
இப்போது, மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளின் படி மஞ்சள் தூள் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து புளி பச்ச வாசனை நீங்க கொதிக்க வைக்கவும். பின்னர் அரை கிலோ நெத்திலி மீன் மற்றும் அரைத்த சீரகம், வெந்தயப் பொடியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் கிராமத்து சுவையில் நெத்திலி மீன் குழம்பு தயார்.