#பேச்சிலர்_ஸ்பெஷல் : 10 நிமிடத்தில் செய்து, 10 நாளுக்கு வைத்து சாப்பிடும் சூப்பரான தக்காளித் தொக்கு.!
#பேச்சிலர்_ஸ்பெஷல் : 10 நிமிடத்தில் செய்து, 10 நாளுக்கு வைத்து சாப்பிடும் சூப்பரான தக்காளித் தொக்கு.!
நம்மில் பலருக்கும் தக்காளித் தொக்கு மிகவும் பிடிக்கும். அம்மா கையால் சுவையாக சாப்பிட்டு பழக்கப்பட்ட நமக்கு இதை பக்குவமாய் எப்படி செய்வது என்று தெரியாது. முக்கியமாக பேச்சிலர்ஸ்க்கு இதனை செய்வது எப்படி என்று தெரியாது. அப்படி எல்லோருக்கும் பிடித்த தக்காளித் தொக்கை சுவையாக வெறும் பத்தே நிமிடத்தில் செய்வது எப்படி என இந்த பதிவில் காண்போம்.
தேவையானப் பொருட்கள்
தக்காளி - 5 (பெரியது )
கடுகு - 2 ஸ்பூன்
வெள்ளை உளுந்து - 1 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
புளிக் கரைசல் - 1 கப் ( எலுமிச்சம் பழ அளவு புளியில் செய்தது)
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெந்தயம் - 1 ஸ்பூன்
பூண்டு - 5 (பல்)
கருவேப்பிலை - 2 (கொத்து)
நல்லெண்ணெய் - 6 தேக்கரண்டி
செய்முறை
முதலில் அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும். பிறகு அடி கனமான ஒரு வாணலியை வைக்க வேண்டும். பின்னர், அதில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பொடிப் பொடியாக நறுக்கிய 5 தக்காளியை சேர்த்து நன்கு கிளற வேண்டும். பிறகு, அதில் புளிக் கரைசலை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், அதில் மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், தனிமிளகாய் தூள் 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து ஒரு 10 அல்லது 15 நிமிஷம் மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
மற்றொரு வாணலியில் ஒரு ஸ்பூன் கடுகு மற்றும் வெந்தயம் ஒரு ஸ்பூன் சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்து அது சூடு தனிந்ததும் ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நாம் கொதிக்க வைத்த தக்காளித் தொக்கில் நீர் வற்றியதும், மற்றொரு தாளிப்பு கரண்டியில் 5 தேக்கரண்டி நல்லெண்ணெய், கடுகு 1 ஸ்பூன், வெள்ளை உளுந்து 1 ஸ்பூன் போட்டு பொறிந்ததும் அதில் சிறிது பெருங்காயம், 2 கொத்து கருவேப்பிலை உறுவி சேர்க்க வேண்டும். இறுதியில் நன்றாக நறுக்கிய பூண்டு 5 ( பல் ) சேர்த்து பொறிந்ததும் அதை தக்காளித் தொக்கில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இதன், இறுதியில் நாம் வறுத்து அரைத்து வைத்த கடுகு, வெந்தய பொடியை சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சுவையான தக்காளித் தொக்கு ரெடி. மேலும், இந்த தக்காளித் தொக்கு சாதம், சப்பாத்தி, தோசை என அனைத்திலும் போட்டு சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்பு
இந்த தக்காளித் தொக்கை காற்றுப் புகாத கண்ணாடி பாத்திரத்தில் மூடி வைத்து விட்டால் 10 நாளில் இருந்து 20 நாட்கள் வரை தாராளமாக உபயோகிக்கலாம். ஹாஸ்டல் மற்றும் பேச்சுலர் அறைகளில் தங்கி இருப்பவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.