உடலுக்கு சத்துக்களை வாரிக்கொடுக்கும் வரகரிசி உப்புமா..!
உடலுக்கு சத்துக்களை வாரிக்கொடுக்கும் வரகரிசி உப்புமா..!
இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் முக்கிய பணியை வரகரிசி செய்கிறது. அரிசி மற்றும் கோதுமையை ஒப்பிடும்போது, வரகரிசியில் நார்சத்து அதிகளவு உள்ளது. மாவுசத்து குறைந்தளவு உள்ளது. இது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
வரகரிசி உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
வரகரிசி - 1 கிண்ணம்,
வெங்காயம் - 2,
ப.மிளகாய் - 2,
கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு - தலா 1 கரண்டி,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
பெருங்காயத்தூள் - சிறிதளவு.
செய்முறை :
முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர், வரகரிசியை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து மற்றும் கடலைப்பருப்பு போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் பெருங்காயத்தூள், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
இவை வதங்கியதும் கடாயில் 3 கிண்ணம் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதிக்க தொடங்கியதும், வரகரிசியை சேர்த்து கிளற வேண்டும். அப்போது, அடுப்பை மிதமான தீயில் வைப்பது நல்லது.
அரிசி நன்றாக வெந்ததும் உப்பு, கறிவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால் சுவையான, சத்தான வரகரிசி உப்புமா தயார்.