சர்க்காரால் பறிபோன உயிர்! தூக்கில் தொங்கிய வாலிபர்; தொடரும் மர்மம்!
man died of fight with vijay fans
சக்கரம் திரைப்படத்தின் பேனரை செய்ததால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே ஈராளச்சேரி கிராமத்தைச் சேர்ந்த தயாளன் என்பவரின் மகன் மணிகண்டன் (28). இவர் சென்னையில் வாடகை கார் ஓட்டுநராக வேலைச் செய்து வந்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு பண்டிகையை தன் குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக மணிகண்டன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
நேற்று விஜய் நடிப்பில் வெளியான 'சர்கார்' படத்திற்கு விஜய் ரசிகர்கள் சிலர், மணிகண்டனின் வீட்டின் அருகே பேனர் வைத்துள்ளனர். குடிபோதையில் இருந்த மணிகண்டன், 'சர்கார்' பேனரைக் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் சிலர் மணிகண்டனைச் சுற்றி வளைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனை கண்டா மணிகண்டனின் உறவினர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த அவரது சித்தப்பா வீட்டிற்குள் தள்ளி வெளிப்பக்கமாக கதவை பூட்டியுள்ளனர்.
'என்னை அடுத்தவர்களை திரும்பத் அடித்தே ஆகா வேண்டும்; கதவைத் திறந்துவிடுங்கள்' என்று மணிகண்டன் கத்தியுள்ளார். ஆனால் உறவினர்கள் கதவைத் திறக்கவில்லை. விஜய் ரசிகர்கள் மேலும் சிலர் அப்பகுதியில் திரண்டனர். இதனால் அந்த பகுதி பெரிதும் பதற்றத்துடன் காணப்பட்டது.
நிலைமை சற்று மாறியதும் சிலமணி நேரம் கழித்து, உறவினர்கள் கதவை திறந்து வீட்டிற்குள் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மணிகண்டன் தூக்கில் பிணமாகத் தொங்கிக்கொண்டிருந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுததால் வெளியில் நின்றுகொண்டிருந்த விஜய் ரசிகர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனை தொடர்ந்து காவேரிப்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டனின் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விஜய் ரசிகர்கள் தாக்கியதால் அவமானத்தில் மணிகண்டன் தற்கொலைச் செய்து கொண்டாரா? அல்லது பூட்டியிருந்த வீட்டிற்குள் யாரேனும் புகுந்து மணிகண்டனை அடித்துக்கொன்று பிணத்தை தூக்கில் தொங்கவிட்டனரா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.