எவ்ளோ சம்பளம் வாங்கியும், போதவில்லையா.?! இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க.!
எவ்ளோ சம்பளம் வாங்கியும், போதவில்லையா.?! இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க.!
ஒவ்வொரு மாதமும் நாம் சம்பளம் வாங்குகின்றோம். ஆனால் அவை எல்லாம் எப்படி செலவாகிறது? எங்கே செல்கிறது என்பது தெரியாமல் காணாமல் போய்விடுகிறது. அப்படி செலவாகி விடும் பணத்தை சேமிக்க சில வழிமுறைகளை இங்கே சொல்லி இருக்கிறோம். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நாம் சம்பாதிக்கின்ற பணத்தை எதற்கு எதற்காக எல்லாம் செலவு செய்கிறோம் என்பதை முதலில் கவனிக்க வேண்டும். தேவையில்லாத செலவுகளை அப்போதுதான் நாம் கண்டறிய முடியும். அவ்வாறு கண்டறியும் போது அதை குறைத்துக் கொள்ள வேண்டும். நாம் செலவிடும் செலவுகளை பட்டியலிட்டு அத்தியாவசியம் ஆடம்பரம் என்று இரண்டாகப் பிரிக்க வேண்டும். அப்போது ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும் என குடும்பத்தாருடன் பேசி முடிவெடுக்க வேண்டும்.
ஏற்கனவே கடன் இருப்பதை அடைப்பது எவ்வளவு முக்கியமோ? அதைவிட மிக முக்கியமானது புதிய கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது. முடிந்த அளவிற்கு இருக்கின்ற பணத்தை வைத்து செலவு செய்ய வேண்டும். புதிதாக யாரிடமும் இனி கடன் வாங்க கூடாது என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கும் பணத்தில் இவ்வளவு என்று ஒரு பகுதியை சேமித்து வைப்பதை கட்டாயம் ஆக்க வேண்டும். இதை முதலீடு மற்றும் காப்பீடு திட்டங்களில் போட்டு வைக்கலாம்.
இதோடு இல்லாமல் சிறிய தொகை ஒன்றை ஒவ்வொரு மாதமும் நாம் எடுத்து வைத்துக் கொண்டு சேர்த்தால் திடீர் செலவுகள், சுப காரியங்கள் ஏதாவது வரும் பொழுது நமக்கு அந்த பணம் கை கொடுக்கும். யாரிடமும் போய் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. இதனால் அந்த கடனுக்கு நான் வட்டி கட்ட வேண்டும் என்ற நிலைமையும் நமக்கு இருக்காது. எனவே இதுவும் ஒரு வகை சேமிப்பு தான்.
சுற்றுலா செல்வது, ஆடை அணிகலன்கள் வாங்குவது, தியேட்டர்களுக்கு செல்வது உள்ளிட்டவை ஆடம்பர செலவுகள் ஆகும். இந்த செலவுகளுக்காக ஒருபோதும் கடன் வாங்குவது கூடாது. சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களுக்கு பணம் எடுத்து வைத்துவிட்டு, வீட்டு செலவு போக மீதம் பணம் இருந்தால் மேலே கூறிய ஆடம்பர செலவுகளை மேற்கொள்ள வேண்டுமே ஒழிய எக்காரணத்தை கொண்டும் கடன் வாங்கி ஆடம்பர செலவுகளை செய்யக்கூடாது.
வீட்டில் மின்சார பயன்பாட்டை கவனித்து தேவை இல்லாமல் எரியும் லைட் மற்றும் ஃபேன் உள்ளிட்டவற்றை அணைத்து விட வேண்டும். ஏசி உள்ளிட்ட சாதனங்களையும் முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும். மின்சார கட்டணத்தை சிக்கனப்படுத்தி அந்த பணத்தையும் சேமிக்கலாம். கடைகளுக்கு சென்று ஆடைகள் மற்றும் மற்ற பொருட்களை வாங்குவதை விட ஆன்லைனில் தரத்தை பரிசோதித்து விட்டு பொருட்களை வாங்குவது பயண செலவு மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும்.
வீட்டிற்கு வெளியில் சென்று ஹோட்டல் விடுதிகளில் உணவு உண்ணாமல் அதிகபட்சம் வீட்டிலேயே உணவு சாப்பிட வேண்டும். இது ஹோட்டலுக்கு செலவிடும் தொகையை கட்டுப்படுத்துவதுடன், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்கின்ற செலவையும் சேர்த்து கட்டுப்படுத்துகிறது என்பதை உணர வேண்டும்.