வயலில் இறங்கி விவசாயம் செய்யும் அமைச்சருக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்.!
pondichery agri minister kamalakkannan
தனது வயலில் சாதாரண விவசாயி போல விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். இதனால் அவரை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து இன்று புதுச்சேரி மாநில வேளாண் துறை அமைச்சராக பொறுப்பு வசிப்பவர் கமலக்கண்ணன். தான் ஒரு அமைச்சராக இருந்தாலும் நேரம் கிடைக்கும்போது தனது வயலுக்கு சென்று விவசாய பணிகளை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் தனது வயலுக்கு சென்ற அமைச்சர் கமலக்கண்ணன் தனது வேஷ்டி, சட்டையை கழட்டி வைத்துவிட்டு சாதாரண விவசாய உடையில் சேற்றில் இறங்கி மண்வெட்டி பிடித்து நடவு பணி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளை செய்தார். அதன்பிறகு நடவு நடுவதற்கு தேவையான நாற்றுக்களை சுமந்துவந்து போட்டுள்ளார்.
அதனை நேரடியாக பார்த்தோர் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். மேலும் ஒரு சிலரால் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது பரவி வருகிறது.
இதுகுறித்து அமைச்சர் கமலக்கண்ணன் கூறுகையில், விவசாயம் செய்வது எனக்கு பிடிக்கும். நான் அமைச்சராக இருந்தாலும் அடிப்படையில் விவசாயி தான். ”உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்; உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்” என்ற பாரதியார் பாடல்களுக்கேற்ப நான் விவசாயப்பணியில் ஈடுபட்டு வருகிறேன் என்று மகிழ்ச்சிபட கூறினார்.