வெளியே நிதி நிறுவனம்; உள்ளே விபச்சாரம்! 70வயது முதியவரிடம் இருந்து 3 பெண்கள் மீட்பு
prostitution inside the finance company
மும்பையில் நிதி நிறுவனம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்த 70 வயது முதியவரை குற்றவியல் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்களையும் மீட்டுள்ளனர்.
மும்பை ஒர்லி பகுதியில் கஜலட்சுமி பைனான்ஸ் என்ற நிறுவனத்தை ராம்னிக் பட்டேல் என்பவர் துவங்கியுள்ளார். பட்டேலுக்கு வயது 70. அந்த நிறுவனம் பெயரளவில் மட்டுமே நிதி நிறுவனமாக இருந்துவந்துள்ளது. பைனான்ஸ் தொடர்பாக அந்த நிறுவனத்தில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. நிறுவனத்தின் உள்ளே பிரத்தியேகமாக ஒரு அறையை தயார் செய்துள்ளார் படேல். ஒரு படுக்கையுடன் விபச்சாரம் செய்வதற்கு வசதியாக அந்த அறை உருவாக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் மூலம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி விபச்சாரத்திற்கு விளம்பரம் செய்துள்ளார் படேல். நிதி நிறுவனத்தில் வேலை தருவதாக பெண்களை வரவழைத்து அவர்களை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். இதேபோன்று கடந்த மூன்று மாதங்களாக அவர் செய்துள்ளார். இந்த நிறுவனத்திற்குள் நடக்கும் அவலம் பற்றி தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் இதனை போலீசாருக்கு புகாராக தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இரவு ஒர்லி காவல் நிலையத்தில் இருந்து போலீசார் அந்த நிறுவனத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கே ஒரு சிறுமியும் மேலும் இரண்டு பெண்களும் மீட்கப்பட்டனர். அப்போது சில பெண்களின் அடையாள அட்டைகள் நிறுவனத்திலிருந்து கைப்பற்றப்பட்டன. இது குறித்து விளக்கம் அளித்த படேல் அந்தப் பெண்கள் தன்னுடைய நிதி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என சமாளித்துள்ளார்.
ஆனால் இதைப் பற்றி அந்த பெண்களிடம் விசாரணை நடத்துகையில், அவர்கள் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் படேலை கைது செய்தனர். மேலும் பல பெண்களின் புகைப்படங்கள் படேலின் மொபைல் போனிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.