தூங்கும்போது பேய் அமுக்குகிறதா? அதுக்கு உண்மையான காரணம் இதுதானாம்.
sleeping paralysis full details in Tamil
சிலர் தூங்கும்போது தங்களால் எழுந்திரிக்கமுடியவில்லை என்றும் தங்களை பேய் அமுக்குவதாகவும் கூறி நாம் கேட்டிருப்போம். இதைப் பற்றி பாட்டியிடம் கேட்டால், இது அமுக்குவான் பேய்ப்பா, அது தெரியாதா? வா கோயிலுக்குப் போய் மந்திரிக்கலாம் என்பார்கள்.
இதுபோன்ற நிலையில் நீங்கள் படுக்கையில் படுத்து நீண்ட நேரம் கழித்து விழிக்கிறீர்கள். குறிப்பிட்ட இடைவெளியில் நாம் தூங்கினோமா இல்லையா என்ற ஒரு கேள்வி உங்கள் மனதிற்குள் எழும், சரி எழுந்திருக்கலாம் என நீங்கள் முற்படும்போது உங்கள் உடல் அசையாது. மூச்சு விட சிரமப்படுவீர்கள். யாரோ உங்கள் முகத்தை போட்டு அமுக்குவது போன்று ஒரு உணர்வு வரும்.
இதைத்தான் நமது பாட்டி அமுக்குவான் பேய் என்கிறார்கள். இது உண்மையா என்றால் நிச்சயம் இல்லை. இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
ஆங்கிலத்தில் இதை ‘Sleep Paralysis’ என்று அழைக்கிறார்கள். இந்த நிலை ஏற்பட்ட மிக முக்கிய காரணம் என்னவென்றால் உடல் அடுத்தடுத்த உறக்க நிலைகளுக்குச் சீராக செல்ல மறுப்பதுதான். மேலும் உடல் சோர்வினாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
நமது உடலில் இருக்கும் நியூரான் செல்கள் சரிவர இயங்காமல் அதற்குள் ஏற்படும் குழப்பமே இந்த நிலைக்கு மிக முக்கிய காரணம் என்கிறது அறிவியல். அதாவது, இந்த செல்கள் சரிவர இயங்காததால் பல்வேறு தூக்க நிலைகள் சீராக ஏற்படாமல், ஒன்றோடு ஒன்று பிணைந்து குழப்பம் ஏற்படுத்துகிறது.
நீங்கள் விழித்து உங்கள் மூளை செயல்பட ஆரம்பிக்கும், ஆனால் உங்கள் உடல் செயல்படாது. இதுபோன்ற நேரத்தில் நமது மூளையானது பல்வேறு அச்ச உணர்வுகளை நமது உடலுக்கு காண்பித்து நம்மை தூக்கத்தில் இருந்து எழவைக்கின்றது.