சுகர் லெவலை.. கன்ட்ரோல் பண்ணனுமா.?! இதை ட்ரை பன்னுங்க.!
உங்க சுகர் லெவல் கன்ட்ரோலில் இருக்கணுமா.? அப்போ உங்களுக்கு சில டிப்ஸ்.!
நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். இது கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலினை உடல் திறம்பட பயன்படுத்த முடியாதபோது ஏற்படும். சிறு சிறு வாழ்வியல் முறை மாற்றங்களாலும், நல்ல உணவு பழக்கங்களாலும், நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.
நீரிழிவு நோயாளிகள் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை மிதமான அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் (கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி போன்றவை), கீரைகள், மீன், முட்டை, அதிக கொழுப்பு இல்லாத இறைச்சி, பிரோக்கோலி, காலிஃப்ளவர், விதைகள், தக்காளி, பூண்டு, ஓட்ஸ், சோயா பாலில் இருந்து செய்யப்பட்ட பன்னீர் (Tofu) போன்ற உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
பழங்களில் மாம்பழம், சப்போட்டா, திராட்சை, பலாப்பழம், வாழைப்பழம் போன்றவற்றை தவிருங்கள். அரிசி, கோதுமைக்கு பதிலாக நம் நாட்டு சிறுதானிய வகைகளான வரகு, சாமை, குதிரைவாலி போன்றவற்றை உண்பது மிகவும் சிறந்தது. சிகப்பு அரிசி, முழு தானிய வகை உணவுகள் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
அதிகம் எண்ணெய் சேர்த்து, வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், சோடா மற்றும் சர்க்கரை கலந்த பழச்சாறுகள், இனிப்பு வகைகள், சோடியம் அதிகம் உள்ள உணவுகளான பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஊறுகாய், சாஸ் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
உங்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க, உடற்பயிற்சிகள் அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குறைவான இரத்த ஓட்டம் மற்றும் அதிக அளவு குளுக்கோஸின் காரணமாக நரம்புகள் சேதமடைந்து, பாதங்களில் பிரச்சனைகள் உருவாகலாம். எனவே பாதங்களையும் நன்றாக பராமரியுங்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி அவ்வப்போது ரத்த சக்கரை அளவை பரிசோதித்து, அதற்கு ஏற்ப மருந்துகள் எடுத்துக் கொள்வது அவசியம்.