வரப்போகும் தேர்வுகளுக்கு உங்கள் குழந்தைகளை தயார் செய்வது எப்படி.? இதோ சில டிப்ஸ்.!
வரப்போகும் தேர்வுகளுக்கு உங்கள் குழந்தைகளை தயார் செய்வது எப்படி.? இதோ சில டிப்ஸ்.!
இன்னும் சில மாதங்களில் குழந்தைகளுக்கு தேர்வுகள் துவங்க உள்ளன. அவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று, வாழ்வில் நல்ல நிலையை அடைய வேண்டும் என்பது எல்லா பெற்றோர்களின் விருப்பமாகும். தேர்வு நேரங்களில் குழந்தைகளுக்கு உறுதுணையாக இருக்க பெற்றோர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று முதலில் அறிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக படிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். ஒரு குழந்தை வாய்விட்டு சத்தமாக படிக்கலாம். மற்றொரு குழந்தை, வாயை திறக்காமல் படிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கலாம். ஒருவர் தொடர்ந்து, இரண்டு அல்லது மூன்று மணி நேரம் படிக்கலாம். வேறு ஒரு குழந்தையோ அவ்வப்போது இடைவெளி எடுத்து படிக்கலாம். இப்படி உங்கள் குழந்தையின் படிக்கும் பழக்கம் என்ன என்பதை முதலில் நீங்கள் அறிய வேண்டும். அதற்கேற்றார் போல் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
தேர்வு தொடங்கும் முன், படிப்பதற்கான அட்டவணையை தயாரிப்பதில் குழந்தைகளுக்கு நீங்கள் உதவலாம். மற்றொரு குழந்தையுடன் ஒப்பிட்டு பார்த்து விமர்சனம் செய்யாதீர்கள். தேர்வு நாட்களில், எளிமையாக செரிக்க கூடிய உணவுகளை கொடுங்கள். அது சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
படிக்கும் நேரங்களில் இடைவெளி எடுப்பது அவசியம். அது அவர்கள் மனதிற்கு அமைதியை கொடுப்பதுடன், நினைவாற்றலையும் அதிகப்படுத்தும். எல்லா நேரங்களிலும் அறிவுரை கூறுவது, எந்த நேரமும் படிக்கச் சொல்லி நச்சரிப்பது மற்றும் தண்டனைகள் வழங்குவது பயனளிக்காது. அவ்வாறு செய்வது அவர்களுக்கு விரக்தியை ஏற்படுத்தும்.
முந்தைய தேர்வை சிறப்பாக செய்யாத போது, அடுத்த தேர்வுக்கான தன்னம்பிக்கையை குழந்தைகள் இழக்க கூடும். அப்போது அவர்களுக்கு தைரியம் கூறி, அடுத்து வரும் தேர்வுகளை நன்றாக செய்வதற்கு ஊக்கப்படுத்துங்கள். முடிந்ததை எண்ணி கவலை கொள்ள வேண்டாம் என்றும் ஆறுதல் கூறுங்கள். அவர்களை மூச்சுப் பயிற்சி செய்ய ஊக்கப்படுத்தலாம். கற்பதில் சிரமம் இருப்பின், அவர்களின் ஆசிரியரையோ அல்லது அதற்கான நிபுணர்களையோ சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.