அவதூறு பரப்பியதாக பரபரப்பு புகார்: சீமான் மீது வழக்கு பதிவு..!
வட மாநில தொழிலாளர்கள் மீது அவதூறு பரப்பியதாக பரபரப்பு புகார்: சீமான் மீது வழக்கு பதிவு..!
வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக எழுந்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடைபெற்றதாக பரவிய வந்தியால் வட மாநில தொழிலாளர்கள் இடையே பதற்றம் நிலவியது. அதே நேரத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு திரும்ப வட மாநிலத்தவர்கள் முண்டியடித்ததால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இந்த விவகாரம், பீகார் சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இதனையடுத்து உண்மை நிலையை கண்டறிய பீகார் அரசு ஒரு குழுவை தமிழகத்திற்கு அனுப்பியது. மேலும் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார்.
இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தது. இதற்கிடையே சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 4 பேரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் அவதூறு பரப்பியதாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீது கடந்த வாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக எழுந்த புகாரில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 13 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.