#BREAKING: விசிக தலைமைக்கு அதிர்ச்சி தந்த ஆதவ் அர்ஜுனா; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
#BREAKING: விசிக தலைமைக்கு அதிர்ச்சி தந்த ஆதவ் அர்ஜுனா; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இல்லை என்பதால், தற்போதைய சூழ்நிலை கருதி விசிக கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக பணியாற்றி வந்த ஆதவ் அர்ஜுனன், சமீபத்தில் கட்சியின் கொள்கை என தெரிவித்த கருத்துக்கள், அக்கட்சிக்கும் - திமுகவுக்கும் இடையே இருந்த கூட்டணி உறவை முறிக்கும் வகையில் பல சலப்புகளை உண்டாக்கியது. இதில், முக்கிய விஷயமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட அம்பேத்கர் புத்தக வெளியீடு விழாவில், திமுகவின் செயல்பாடுகளை முன்னிறுத்தி நேரடியாக எதிர்ப்பு கருத்தை பேசி இருந்தார்.
இந்த விஷயம் மாநில அளவில் விசிக-திமுக அரசியல் பரபரப்பை உண்டாக்கியது. இதனால் ஆதவ் அர்ஜுனனை விசிக தலைவர் தொல். திருமாவளவன் 6 மாதகாலம் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைத்து உத்தரவிட்டார். இதனிடையே, ஆதவ் அர்ஜுனன் கட்சியின் பொறுப்பில் இருந்து முற்றிலும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "மக்கள நெனச்சா வேதனையா இருக்கு: திமுக கனவு பலிக்காது.." செல்லூர் ராஜு பேட்டி.!!
கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
இதுதொடர்பாக ஆதவ் அர்ஜுனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். தங்களுடைய சீரிய எண்ணத்தின்பால் எனக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தீர்கள். அந்த பொறுப்புகளோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் கட்சி பணியாற்றினேன். சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய கட்டமைப்புகள், அதன் அடித்தளம், தொடர்ந்து நீளும் அதன் அதிகாரக் கரங்கள், பாதிக்கப்படும் மக்களின் துயர்கள் ஆகியவற்றை நான் ஆற்றிய களப்பணிகளில் உணர்ந்தேன். அதற்கு எதிரான செயற்திட்டங்களைக் கொள்கை ரீதியாக வகுத்து என்னைச் செயற்பட வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
செயல்திட்டம் இல்லை
எளிய மக்கள் குறிப்பாக, 'சாதிய ஆதிக்கத்தினால் காலம்காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை அடைய வேண்டும்' என்ற நோக்கில்தான் நான் என்னை நமது கட்சியில் இணைத்துக்கொண்டேன். விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
வீண்-விவாதத்திற்கு வழிவகை வேண்டாம்
எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை. ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன்.
கட்சியில் இருந்து விலகுகிறேன்
இனி வருங்காலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதை போல “அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள்” என்கிற அடிப்பையில் 'சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு மதப் பெரும்பான்மைவாதம், பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும்' அரசியல் போராட்டங்களில் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன். எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்.
அரசியல் களத்தில் என்னைப் பயணப்பட வைத்து, நேரடியாகக் களமாடச் செய்த தங்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர்களுக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன். கட்சியிலிருந்து வெளியேறும் இந்த கனமான முடிவை கனத்த இதயத்துடன் காலத்தின் சூழ்நிலைக் கருதியே எடுத்துள்ளேன். இனி வரும் காலங்களில் உங்கள் வாழ்த்துகளுடன், மக்களுக்கான ஜனநாயகம், சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் எனது அரசியல் பயணம் தொடரும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "எங்களுக்கு பயமா.? பாஜக எப்போதும் தனி வழி.." அண்ணாமலை அதிரடி பேட்டி.!!