பஞ்சாயத்தை கூட்டிய பழனிசாமி: மேல்முறையீட்டு வழக்கில் பதில் மனு தாக்கல்!.. நாளை மீண்டும் விசாரணை..!
பஞ்சாயத்தை கூட்டிய பழனிசாமி: மேல்முறையீட்டு வழக்கில் பதில் மனு தாக்கல்!.. நாளை மீண்டும் விசாரணை..!
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்று வைரமுத்து ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் அதி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரணை செய்து வருகிறது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி சார்பில் அவரது வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு கட்சி விதிப்படி முறையாக நோட்டீஸ் அளிக்கப்படவில்லை என்றும், நோட்டீசை 15 நாட்களுக்கு முன்பாக அனுப்பப்படவில்லை என்றும் எவ்வித அதிகாரமும் இல்லாதவர்களை கொண்டு பொதுக்குழு நடத்தப்பட்டது என்றும் மனுதாரர்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை.
கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி அ.திமு.க பொதுக்குழு எப்படி முறைப்படி கூட்டப்பட்டதோ, அவ்வாறே கடந்த ஜீலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவும் கூட்டப்பட்டது. அப் பொதுக்குழுவில் இரட்டை தலைமை பதவிகளை நீக்கிவிட்டு பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வரவும், அதற்கான தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்தவும் இந்த பணிகளை மேற்கொள்ள இடைக்கால பொதுச்செயலாளரை நியமித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வமோ அல்லது வைரமுத்துவோ மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்யவில்லை. மாறாக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்கக் கோரி அவர்கள் இருவரும் தாக்கல் செய்துள்ளனர். எனவே, உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. அ.தி.மு.க பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் அனைவரையும் கட்டுப்படுத்தும். எனவே ஓ.பன்னீர் செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.