குறிவைக்கப்படுகின்றனரா ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள்?!: முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை..!
குறிவைக்கப்படுகின்றனரா ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள்?!: முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை..!
கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். இவர் தற்போது நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக விசாரணை நடத்தி நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் அமைச்சராக இருந்த காலத்தில் அவருடைய அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு சுயலாபம் அடைந்துள்ளதாகவும், வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அவர் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரிலும் ரூ.58 கோடி அளவுக்கு சொத்து சேர்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள காமராஜின் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என 49 இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிகாலை 5 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.