கொரோனாவுக்கு பலியான முதல் மத்திய மந்திரி.! சோகத்தில் அரசியல் தலைவர்கள்!
central minister died for corona
இந்திய ரயில்வே இணை அமைச்சரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவருமான சுரேஷ் அங்காடி உயிரிழந்தார். மத்திய ரயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடிக்கு கடந்த 11ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 4-வது பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் அங்காடி ஆவார். சுரேஷ் அங்காடிக்கு மரியாதை செலுத்தும் வகையில், டெல்லியில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என உள்துறை தெரிவித்துள்ளது.
சுரேஷ் அங்காடியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சுரேஷ் அங்காடி ஒரு விதிவிலக்கான காரியகார்த்தா, அவர் கர்நாடகாவில் கட்சியை பலப்படுத்த கடுமையாக உழைத்தார். அவர் அர்ப்பணிப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினராகவும் திறமையான அமைச்சராகவும் இருந்தார், அவரது மறைவு வருத்தமளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி" என்று கூறியுள்ளார்.