கடலூர் பேருந்து நிலையத்தை இடம் மாற்றுவதை கண்டித்து அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் - எம்.சி.சம்பத் அறிவிப்பு..!
கடலூர் பேருந்து நிலையத்தை இடம் மாற்றுவதை கண்டித்து அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்..எம்.சி.சம்பத் அறிவிப்பு..!
கடலூர் புதிய பேருந்து நிலையத்தை இடம் மாற்றுவதை கண்டித்தும், மாநகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.
கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம். சி. சம்பத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூரில் புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு அருகிலேயே புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பலனளிக்கும் என்ற அடிப்படையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 18 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இடத்தின் எல்லைகளுக்கு சுற்று வேலி அமைக்கும் பணி கடந்த 2021 ஜனவரி 23 ஆம் தேதி துவங்கியது.
ஆட்சி மாற்றம் நடைபெற்ற நிலையில் தற்போது புதிய பேருந்து நிலையம் அமைக்க எம். புதூர் மற்றும் அரிசிபெரியாங்குப்பதில் இடம் தேர்வு செய்ய அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் கடலூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு என் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கடலூரிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரம் கடந்து வந்து பஸ் நிலையத்தை அடைவது என்பது மக்களுக்கு பெரும் காலதாமதத்தையும், பண விரயத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும். பேருந்து நிலையம் இடமாற்றம் என்பது கடலூர் நகர மக்களின் விருப்பத்திற்கு மாறாக உள்ளது.
பேருந்து நிலையத்தை முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கடந்த சில நாட்களாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பஸ் நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என அறிவித்திருப்பது தமிழ்நாட்டில் மக்களின் உணர்வுகளை மதிக்காத ஆட்சி நடக்கிறது என்பது தெளிவாகின்றது.
மேலும் கடலூர் மாநகராட்சியில் முழுவதும் ஆங்காங்கே குப்பை கூளங்கள் நிறைந்துள்ளது, சாலைகளில் குப்பைகள் குவிக்கப்பட்டு அங்கேயே எரிக்கப்படுகின்றன. இதனால் பகல் நேரத்தில் புகை மண்டலம் உருவாகி போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுகின்றது. மாபெரும் சுற்றுச்சூழல், சுகாதார சீர்கேடு நிறைந்த மாநகராட்சியாக கடலூர் மாநகராட்சி விளங்குகின்றது.
மக்களின் உணர்வுக்கு எதிராக செயல்படும் அரசைக் கண்டித்தும், கடலூர் மாநகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் மே 20 வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற உள்ளது. எனவே கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.