×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தி.மு.க ஆட்சியும் குண்டு வெடிப்புகளும்!.. கடந்த '98' லும் வெடித்தது; தற்போதும் வெடிக்கிறது: ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு..!

தி.மு.க ஆட்சியும் குண்டு வெடிப்புகளும்!.. கடந்த '98' லும் வெடித்தது; தற்போதும் வெடிக்கிறது: ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு..!

Advertisement

கோவை சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஒன்றரை ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் தீவிரவாதம், பயங்கரவாதம், கொலை, கொள்ளை, வன்முறை ஆகியவை தலைவிரித்து ஆடுகிறது என்றும் சட்டம் ஒழுங்கு சீர் செய்யப்பட்டால்தான் தமிழ்நாடு தொழில் வளத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேறும் என்று சுட்டிக்காட்டி சட்டம் ஒழுங்கை சீர் செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கைகள் வாயிலாக அவப்போது வேண்டுகோள் விடுத்து வந்துள்ளேன். ஆனால் சட்டம் ஒழுங்கு சீர் செய்யப்பட்டதாக தெரியவில்லை உதாரணமாக காவல்துறையினரால் தமிழ்நாடு முழுவதும் 2500 ரவுடிகள் பிடிக்கப் பட்டதாக பத்திரிகைகளில் சில மாதங்களுக்கு முன் செய்தி வந்தது. நான் கூட அரசு ஏதோ நடவடிக்கை எடுக்கிறது என்றுதான் முதலில் நினைத்தேன்.

ஆனால் இதற்குப் பின் சட்டம் ஒழுங்கு இன்னும் மோசமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டில் அன்றாடம் ஓரிரண்டு கொலைகள் என்ற நிலை படிப்படியாக மாறி, தினமும் 8 முதல் 10 கொலைகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. அண்மைக்காலமாக பெட்ரோல் குண்டு கலாச்சாரம் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவங்கள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. இதைத்தவிர ஏராளமான தற்கொலைகள் வேறு. அண்மையில் கூட ‘ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டை’ என்ற பெயரில் 1310 ரவுடிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் கள எதார்த்தம் என்பது வேறு மாதிரியாக இருக்கிறது. வன்முறை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது.

இதற்கு எடுத்துகாட்டு தான் நேற்று முன் தினம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம், கோயம்புத்தூர் மாவட்டம், கோட்டைமேட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் நேற்று முன்தினம் பலத்த வெடி சத்தத்துடன் கார் ஒன்று வெடித்து சிதறியதாகவும், இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும,; இதற்குக் காரணம் எரிவாயு உருளை வெடிப்பு என்று கூறப்பட்டாலும், காருக்குள் இருந்தவர் காவல் துறையினரின் கண்காணிப்பில் இருந்தநாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. வெடித்து சிதறுண்ட வாகனத்திற்குள்ளும், சம்பவம் நடந்த இடத்திலும் ஆணிகளும், கோலி குண்டுகளும் சிதறிக் கிடந்ததாகவும், மேற்படி விபத்தில் உயிரிழந்த நபர் இதற்கு முன்பு தேசிய உளவுத் துறை முகமையால் விசாரணை செய்யப்பட்டதாகவும், இறந்தவரின் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியத் துகள்கள், மரக்கரி போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களே சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்கிறார் என்றால் இதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது என்பது தெளிவாகிறது. மேலும், இது 1998 ஆம் ஆண்டு திமுக. ஆட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை நினைவூட்டுகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.

தமிழக முதல்வர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களை, வன்முறையாளர்களிடமிருந்தும் தீவிரவாதிகளிடமிருந்தும், பயங்கரவாதிகளிடமிருந்தும் காப்பாற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#O Panneerselvam #AIADMK #Coimbatore #Car blast #Tn govt #MK Stalin
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story