×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தி.மு.க அரசும், தி.மு.கவினரும் இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்க காத்திருக்கிறீர்கள்: சீமான் கொந்தளிப்பு..!

தி.மு.க அரசும், தி.மு.கவினரும் இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்க காத்திருக்கிறீர்கள்: சீமான் கொந்தளிப்பு..!

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு கிராமத்தை சேர்ந்த கோகிலா மரணத்திற்கு காரணமான திமுகவினரையும், காவல்துறையினரையும் உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று  சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேலும் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த அன்புத் தங்கை கோகிலா, திமுகவினர் கொடுத்த பொய் வழக்கால் மனமுடைந்து கடந்த 1ஆம் தேதி தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தாயை இழந்துவாடும் அவரது இரு குழந்தைகளுக்கும், அவரது கணவர் நீலகண்டனுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

தங்கை கோகிலா மீதும், அவரது கணவர் மீதும் புதுக்கோட்டை மாவட்ட திமுக துணை அமைப்பாளர் குமார் கொடுத்த பொய்ப் புகாரினை அரசியல் அழுத்தம் காரணமாக ஏற்று காவல்துறையினர் மிரட்டிய காரணத்தினாலேயே, தான் தற்கொலை செய்துகொள்வதாக தங்கை கோகிலா எழுதியுள்ள கடிதம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஆட்சிக்கு வந்தது முதல் திமுக அமைச்சர்களிலிருந்து மாமன்ற உறுப்பினர்கள் வரை ஏழை எளிய மக்களை இழித்தும் பழித்தும் பேசி அவமதிப்பதையும், அப்பாவி மக்கள் மீது தொடுக்கும் அடக்குமுறைகளையும் தடுக்கத் தவறி, கைகட்டி வேடிக்கைப் பார்க்கும் திமுக தலைமையின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில் செத்துக்கிடந்த பல்லி குறித்து புகார் தெரிவித்த முதியவரை கைது செய்து அவரது மகனைத் தற்கொலைக்குத் தூண்டியது முதல் தற்போது தங்கை கோகிலா தற்கொலைவரை இன்னும் எத்தனை உயிர்களைப் பலி வாங்க திமுக அரசு காத்திருக்கிறது? எதிர்க்கட்சியினர் நடத்தும் அரசியல் கூட்டங்களுக்கு இடையூறு விளைவிப்பது, திமுக ஆட்சியின் ஊழல்கள், முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிப்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் மீது பொய்வழக்கு புனைந்து கொடும் சட்டப்பிரிவுகளின் கீழ் சிறையில் அடைப்பது என மிகமோசமான நிர்வாகத்தை திமுக அரசு நடத்தி வருகிறது.

திமுக பெண் மாமன்ற உறுப்பினர்களின் கணவர்கள் செய்யும் அதிகார அத்துமீறல்கள் குறித்த செய்தி வெளியாகாத நாளே இல்லை என்ற அளவுக்கு ஆட்சி அதிகாரத் துணைகொண்டு திமுகவினர் செய்யும் அட்டூழியங்கள் சொல்லில் அடங்குவதில்லை. கருத்து சுதந்திரத்தின் காவலர்களின் ஆட்சியில் எதிர்க்கட்சியினருக்கும், பத்திரிக்கையாளருக்குமே இந்த நிலைமை என்றால், குரலற்ற எளிய மக்கள் மீது எத்தகைய கொடுங்கோன்மையை நிகழ்த்துகிறது என்பதற்கு தங்கை கோகிலாவின் மரண சாசனமே தக்கச்சான்றாகும். தற்போது தங்கை கோகிலா மரணத்திற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்திருப்பது குற்றவாளிகளைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட கண்துடைப்பு நடவடிக்கை மட்டுமே.

ஆகவே, தங்கை கோகிலாவைத் தற்கொலைக்குத் தூண்டிய புதுக்கோட்டை திமுக துணை அமைப்பாளர் குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்வதோடு, வழக்கினை குற்றப் புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றிச் சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், தங்கை கோகிலாவின் குடும்பத்திற்கு 50 இலட்சம் ரூபாய் துயர்துடைப்பு நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#seeman #NTK #dmk #Tn govt #MK Stalin #Arrest DMK Caders
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story