பாஜக தேசிய செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
h.raja methu police valakku pathivu
பாஜக கட்சியின் தேசிய செயலாளராக இருப்பவர் எச். ராஜா. இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் பல்வேறு தரப்பு மக்களின் கடும் கோபத்திற்கு கண்டனத்திற்கும் உள்ளாகி வருகிறார். மக்கள் அவருக்கு எதிராக பல போராட்டங்களை நடத்திவருகிறார்கள். அப்போதெல்லாம் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்பதையே முன்வைக்கிறார்கள்.
சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கலந்து கொண்டார். அப்பொழுது அவர் மேடையில் உரையாற்றும் போது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அதாவது தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு கோவில்களுக்கு உரிய இடங்களை தனியாருக்கு விற்று விடுகிறார்கள் என்று கடுமையாக பேசினார். மேலும், அதிகாரிகள் வீட்டில் உள்ள பெண்களை இழிவு படுத்தும் விதமாகவும் பேசி இருந்தார்.
இதனால் தமிழகத்தில் உள்ள அரசு பணியாளர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் அவரின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், இந்துசமய அறநிலையத்துறை உதவிஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் கோட்டார் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், ஹெச்.ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்திய தண்டனைச் சட்டம் 505 (3)ன் படி பொது இடத்தில் அவதூறாக பேசுதல், 294 (பி) ஆபாசமாக பேசுதல்,353 அரசுப்பணியாளர்களுக்கு இடையூறு செய்தல், பெண் கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.