கலைஞரின் அடுத்த சாதனை.. பொன்விழாவை சிறப்பாக கொண்டாட தளபதி திட்டம்
கலைஞரின் அடுத்த சாதனை.. பொன்விழாவை சிறப்பாக கொண்டாட தளபதி திட்டம்
திமுகவின் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று நாளையுடன் 49 ஆண்டுகள் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின், திமுக மீண்டும் ஆட்சிக்கு வர தொண்டர்கள் பாடுபட வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.
திமுகவில் தலைவர் என்ற பதவி இல்லாமலேயே அண்ணா கட்சியை தொடங்கினார். காரணம் தலைவர் பதவி தனது வழிகாட்டியாக பாவித்த ஈ.வெ.ரா.பெரியாருக்கானது என்று அந்த இடத்தை அண்ணா காலியாகவே வைத்திருந்தார். மரணம் வரை அவர் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார். அண்ணாவின் மறைவுக்கு பின்னர் கட்சியின் தலைமை பொறுப்பு யாருக்கு? என்று எழுந்த கேள்வி கட்சியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
1969ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி திமுகவின் முதல் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றார். அப்போதிலிருந்து இன்று வரை திமுகவின் தலைவர் பொறுப்பில் உள்ள அவர் 49 ஆண்டுகள் இன்றுடன் நிறைவு செய்து, 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
கருணாநிதி தலைவராக பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ள நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வர தொண்டர்கள் பாடுபட வேண்டும் என முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்:-
கட்சி இதுவரை பல தடைகளை எதிர்கொண்டிருக்கிறது. 1971ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இமாலய வெற்றியை ஈட்டியது இன்று வரை முறியடிக்க முடியாத சாதனையாக உள்ளது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது.
1977 முதல் 1989 வரை திமுக ஆட்சியில் இல்லாத 13 ஆண்டுகளிலும் திமுக தலைவர் கருணாநிதி கட்சியை கட்டுக்கோப்புடன் வைத்திருந்தார். 1989-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த உடனேயே பல திட்டங்களைத் தீட்டியதுடன் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார். ஆனால், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதில் திமுகவுக்குத் தொடர்பிருப்பிதாக ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது.
தேர்தல்களில் தோல்வியே காணாதவராக திகழ்பவர் திமுக தலைவர் கருணாநிதி. 13 தேர்தல்களில் பல தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார். 1957-ம் ஆண்டு முதல் முறையாக குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வுசெய்யப்பட்டார். அதிலிருந்து அனைத்து தேர்தல்களில் வெற்றிவாகை சூடியுள்ளார்.
என அந்த கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.