இந்தியாவையே அதிரவைத்த ரூ.35,000 கோடி ஊழல் வழக்கு; அந்தர் பல்டி அடித்த அஜித் பவார்.. மகாராஷ்டிரா அரசியலில் பெரும் சர்ச்சை.!
இந்தியாவையே அதிரவைத்த ரூ.35,000 கோடி ஊழல் வழக்கு; அந்தர் பல்டி அடித்த அஜித் பவார்.. மகாராஷ்டிரா அரசியலில் பெரும் சர்ச்சை.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர், பாஜக-சிவசேனா கூட்டணி முதல்வர் பொறுப்பு பிரச்சனை காரணமாக பிரிந்தது. இதனால் அம்மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்தது. முதல்வராக சிவசேனா கட்சியின் சார்பில் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்று இருந்தார்.
இதனிடையே, சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே, கட்சியின் எம்.எல்.ஏக்களை தனது வசத்திற்குள் கொண்டு வந்தார். பின் 40 எம்.எல்.ஏக்களுடன் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தந்து, அம்மாநிலத்தின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார்.
இவ்வாறான செயலை சற்றும் எதிர்பாராத உத்தவ் தாக்கரே, எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சிக்கு வர அழைத்தார். ஆனால், கட்சியின் உரிமைகளை கைப்பற்றிய ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியை தக்கவைத்தார். பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.
தேர்தலுக்கு பின்பு பாஜகவுடன் கைகோர்த்து ஆட்சியை பிடிக்க திட்டமிட்ட அஜித் பாவாரின் முயற்சிகள் சரத் பவாரால் தோற்கடிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், மீண்டும் 30 எம்.எல்.ஏக்களுடன் பாஜக கூட்டணிப்பக்கம் சென்றுள்ள அஜித் பவார், அம்மாநிலத்தின் துணை முதல்வராக ஆளுநர் முன்பு பொறுப்பேற்று இருக்கிறார்.
இது அம்மாநில அரசியல் கட்சிகளை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அஜித் பவார் நீர் பாசன அமைச்சராக 1999 - 2009 க்கு இடைப்பட்ட காலங்களில் பணியாற்றிய சமயத்தில், அவர் அத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.70 ஆயிரம் கோடியில் ரூ.35 ஆயிரம் கோடியை நேரடியாக பெற்று ஊழல் செய்ததாக குற்றசாட்டு இருந்தது. விசாரணை நடக்கிறது, ஊழல் உறுதி செய்யப்படவில்லை.
கடந்த தேர்தலின்போது மற்றும் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்தபோது, இவ்வழக்கு விசாரணை சூடுபிடித்து இருந்த நிலையில், மகாராஷ்டிரா தேர்தலுக்கு பின்னர் அஜித் பவார் பாஜகவின் உதவியுடன் ஆட்சியை கைப்பற்ற எம்.எல்.ஏக்களை அழைத்து வந்ததும் விசாரணை முடங்கிப்போனது.
இந்த நிலையில் தான் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 30 எம்.எல்.ஏக்களை அழைத்துக்கொண்டு பாஜக-சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு அளித்து, அவரும் துணை முதல்வர் பதவியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் அம்மாநில எதிர்கட்சிகளால் மீண்டும் பேசுபொருளாக்கப்பட்டு இருக்கிறது.